ஹட்டன் - டிக்கோயா நகரசபையினால் திட்டமிடப்பட்ட 50 அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்று மட்டுமே நிறைவு! வெளிவந்துள்ள தகவல்
கடந்த ஆண்டு ஹட்டன் - டிக்கோயா நகரசபையினால் திட்டமிடப்பட்ட 50 அபிவிருத்தித் திட்டங்களில் இதுவரை ஒரேயொரு திட்டம் மாத்திரமே முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ தலைமையில் நேற்றுமுன் தினம் (20.11.2026) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
நகரசபைத் தலைவர் அசோக கருணாரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தரப்பிலும் பல்வேறு குறைபாடுகள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதி
எவ்வித அரசியல் பேதங்களுமின்றி அனைவரும் ஒன்றிணைந்து குழுவாகச் செயற்பட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார்.

அத்துடன் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களை நடத்துமாறு மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள்
நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடலுக்கு அமைய அடையாளம் காணப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்துஇ 2027ஆம் ஆண்டில் ஏனைய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதமாக ஆரம்பித்து ஹட்டன் நகரை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.




