மின்சார வாகன பேட்டரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்
இலங்கையில் பயன்பாட்டுக் காலம் முடிவடைந்த மின்சார வாகன (EV) பேட்டரிகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேகரித்து, அகற்றி, மறுசுழற்சி செய்வதற்கான முறையான திட்டம் அவசியம் என நாடாளுமன்றத்தின் வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இடம்பெற்றது.
மின்சார வாகனங்களின் இறக்குமதி
இதன்போது, EV பெட்டரிகளை முறையாக அகற்றி மறுசுழற்சி செய்வதற்கான பொறுப்பை இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடம் ஒப்படைத்தல், மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகளுக்கான தரநிலைகளை அறிமுகப்படுத்துதல், வாகன இறக்குமதி வரிக் கொள்கைகளை எளிமைப்படுத்தி மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவித்தல், சுங்க வகைப்பாடு போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

மேலும், இறக்குமதிப் பொருட்களுக்கான அரச நிறுவனங்களின் அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் துறைமுகங்களில் கொள்கலன்கள் தேங்குவதால் இறக்குமதியாளர்கள் எதிர்கொள்ளும் மேலதிக செலவுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியுள்ளது.
மின்சார வாகனங்களின் இறக்குமதி மற்றும் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் பெட்டரிகளை சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கையாள்வதற்கான விரிவான தேசியக் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியமும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.