திருகோணமலை இயற்கை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானம்! - வியாழேந்திரன்
திருகோணமலையில் அமைந்துள்ள இயற்கை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் (S. Viyalendiran) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை இயற்கை துறைமுகத்தினை பார்வையிடுவதற்காக நேற்று (04) வருகை தந்தபோது ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
உங்களுக்கு தெரியும் உலகில் பிரசித்திபெற்ற துறைமுகங்களில் ஒன்றாக திருகோணமலை இயற்கை துறைமுகம் காணப்படுகின்றது.
இது ஒரு இயற்கைத் துறைமுகம் கடந்த காலம் முதல் அபிவிருத்தி என்ற ஒன்றை காணாத ஒரு சூழல்தான் இருந்து வந்து இவ்வேளையில் தற்போது அரசாங்கம் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்கின்ற நடவடிக்கைகளில் கூடுதலான கவனத்தை செலுத்தி வருகின்றது.
அந்த அடிப்படையில் நான் இந்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவன் என்ற வகையில் திருகோணமலை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடு இருப்பதனால் இது தொடர்பாக நாங்களும் எங்களுடைய கோரிக்கைகளை இந்தப் பகுதி மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் கப்பல் மற்றும் துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேவர்தன அவர்களின் முயற்சியில் திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் இவ்வாறான வீதி அபிவிருத்தி துறைமுக அபிவிருத்திகள் என பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின்
முக்கிய கோரிக்கைகளாக வீதி அபிவிருத்தி மற்றும் கப்பல் போக்குவரத்து போன்ற
போக்குவரத்து தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக இந்த திருகோணமலை
இயற்கை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும் என்றும், இதனால் நாட்டில் ஏற்படுகின்ற வேலையில்லா பிரச்சினைகளுக்கும் பாரிய ஒரு தீர்வு எட்டப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.