புதிய முதலீட்டு வாய்ப்புக்களை உருவாக்கவுள்ளதாக மக்களுக்கு உறுதியளித்துள்ள ஜனாதிபதி
புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி மக்களுக்கான தொழில் வாய்ப்புக்களை அதிகளவில் ஏற்படுத்தி அடுத்த சில வருடங்களுக்குள் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
சபுகஸ்கந்த அபேசேகரராமவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட போதி மதில் மற்றும் தங்க வேலி திறப்பு நிகழ்வு நேற்று (25.01.2024) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பெரும் முன்னேற்றம்
மேலும் தெரிவிக்கையில், “எனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த பியகம தேர்தல் தொகுதிக்கு அன்று தான் வந்த போது மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் முதலீட்டு வலயத்தை நிறுவியமையால் மிக குறுகிய காலத்தில் பியகம பெரும் முன்னேற்றத்தை அடைந்தது.
அதே முறையில், திறந்த பொருளாதாரத்தில் முழுமையாகப் பயனடையும் வகையில் நாடு முழுவதும் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கி, தேசிய பொருளாதாரத்தை பத்து மடங்கு மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பின்தங்கிய பிரதேசம்
மேலும், அபேசேகரராமய இப்பிரதேசத்தின் பிரதான விகாரையாக இருந்தது. இந்நிலையில் பியகம தொகுதி அமைப்பாளராகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பியகம வேட்பாளராகவும் முதல் தடவையாக இந்த இடத்திற்கு வந்தேன். அப்போது பியகம மிகவும் பின்தங்கிய பிரதேசமாக இருந்தது.
பியகமவிற்கு அடுத்தபடியாக பின்தங்கிய பகுதியாக அகலவத்தை இருந்தது. இருப்பினும் அகலவத்தையில் தேயிலைத் தோட்டங்கள், இறப்பர் தோட்டங்கள், தேயிலைத் தொழிற்சாலைகள் என்பன காணப்பட்டன. ஆனால் பியகமவில் ஒரேயொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மாத்திரமே இருந்தது.
எனது அலுவலகம் அபேசேகரராமவை அண்மித்த காணியில் அமைந்திருந்த கட்டடத்திலேயே காணப்பட்டது. அரசியல் வாழ்க்கை இந்த இடத்தில் இருந்து ஆரம்பித்தது. அந்த அரசியல் பயணம் இன்று ஜனாதிபதி பதவியை எட்டியுள்ளது.
நான் புதிய வழியில் ஜனாதிபதி பதவிக்கு வந்தேன். அரசாங்கம் வீழ்ந்த போது எவரும் பொறுப்பேற்க முன்வராத வேளையில், அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். இந்நிலையில் இப்போது இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.
இன்று படிப்படியாக நாடு இயல்பு நிலைக்குத் திரும்பிகொண்டிருக்கிறது. நாட்டில் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் ஏற்படும் பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. தற்போது அந்த நிலையில் இருந்து படிப்படியாக முன்னேறி வருகிறோம்.
நேர்மறை பொருளாதாரம்
மேலும், உலக வங்கியின் தலைவர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இருப்பினும் நாங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம், எனினும், எங்களின் வருமானம் போதுமானதாக இல்லை.
எனவே, நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.அதனால்தான், துரதிர்ஷ்டவசமாக, VAT வசூலிக்க வேண்டியேற்பட்டது. இப்போது நாம் எதிர்மறை பொருளாதாரத்திற்கு பதிலாக நேர்மறை பொருளாதாரத்தை நோக்கி நகர்கிறோம்.
புதிய தொழில்துறைகள் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி மக்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க வேண்டும். அதற்கான தகுந்த சூழலை உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். நாடு முழுவதும் பியகம முதலீட்டு வலயம் போன்ற முதலீட்டு வலயங்களை உருவாக்கி நாட்டின் பொருளாதார வேகத்தை பத்து மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
முதலீட்டு வலயங்கள்
மேலும், பியகம மற்றும் கட்டுநாயக்க முதலீட்டு வலயங்கள் தெற்காசியாவின் சிறந்த முதலீட்டு வலயமாக மாறியுள்ளன.
இங்கு முழுமையான பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பியகமவின் அபிவிருத்தியுடன் களனியும் பல துறைகளில் அபிவிருத்தி கண்டது.பியகம திறந்த பொருளாதாரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனுடன் களனியும் இணைந்துகொண்டது.
இதனோடு குறுகிய காலத்தில் தலுகம, கிரிபத்கொட, மாகொல, மாவரமண்டிய, கடவத்தை ஆகியன பெரும் பொருளாதாரத்தை கொண்ட பகுதிகளாக மாறின.
தேசிய பொருளாதாரம்
மேலும், குறித்த அபிவிருத்தியை நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் செய்ய திட்டமிட்டுள்ளோம். பிங்கிரிய, கண்டி, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, வடக்கு உள்ளிட்ட பகுதிகளை முதற்கட்டமாக அடையாளம் கண்டிருக்கிறோம்.
எனவே, திறந்த பொருளாதாரத்தைப் பயன்படுத்தி, தேசிய பொருளாதாரத்தை பத்து மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.” என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் தீனியாவல பாலித நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, இலங்கைக்கான ஜப்பானிய பிரதித் தூதுவர் கட்சுகி கொட்டாரோ, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, மற்றும் யொஷிடா சர்வதேச பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பிரதேசவாசிகள் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |