யாழில் பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளை பாதுகாப்பாக அகற்ற தீர்மானம்(Photos)
யாழ்ப்பாணம் - குப்பிளானில் உள்ள களஞ்சியசாலையில் பழுதடைந்த உருளைக்கிழங்கு
விதைகளை பாதுகாப்பாக அகற்றி விவசாய நிலங்கள் மற்றும் குடிநீரை பாதிக்காத வகையில் புதைப்பதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாய திணைக்களத்தின் கண்காணிப்பில் மூன்று அடி ஆழத்திற்கு கீழே பாதுகாப்பு முறைமைகளை கையாண்டு சில தினங்களுக்குள் பழுதான உருளைக்கிழங்கு விதைகள் புதைக்கப்படவுள்ளன.
இது தொடர்பிலான கலந்துரையாடல் திணைக்கள தலைவர்கள், துறைசார் அதிகாரிகள் விவசாயிகளுக்கும் இடையே இன்று (31.12.2023)) இடம்பெற்றுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கை
குறித்த கலந்துரையாடலில், உருளைக்கிழங்கு விதைகளை விவசாய நிலங்களில் புதைத்து மண்ணையும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்த வேண்டாம் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உருளைக்கிழங்கு விதைகளை பொலீத்தினில் பொதி செய்து பாதுகாப்பாக களஞ்சியசாலையில் இருந்து அகற்றி பாவனையற்ற பகுதிகளில் புதைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பழுதான உருளைக்கிழங்கு விதைகளை பாதிப்பில்லாத வகையில் புதைப்பதற்கு ஏற்ற இடத்தை இனங்காண தீர்மானிக்கப்பட்டபோதும் எங்கு புதைப்பது என்பது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
உலக வங்கியின் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மானிய அடிப்படையில் யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த 21 மெட்ரிக் தொன் உருளைக்கிழங்கு விதைகள் குப்பிளானில் அண்மையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது.
அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குறித்த விதை உருளைக்கிழங்குகள் பெக்டோ பெக்டீரியம் கெரெட்டோபோரம் எனப்படும் பக்டீரியா தாக்கத்திற்குள்ளானமையினால் பழுதடைந்திருந்தமை தொடர்பில் கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பக்டீரியா தாக்கத்தினால் 21 மெட்ரிக் தொன் விதை உருளைக்கிழங்குகளையும் பயன்படுத்த முடியாத நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


