போதைப்பொருள் சந்தேகநபருக்கு தடுப்புக்காவல் உத்தரவு
மரக்கறி விற்பனை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
விசேட சோதனை
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தற்காலிக மரக்கறி விற்பனை நிலையம் எனும் போர்வையில் சூட்சுமமாக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை (18) அன்று விசேட சோதனை நடவடிக்கை அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு 32 வயதுடைய ஒலவில் பகுதியை சேர்ந்த சந்தேகநபர் கைதானார்.
தடுப்புக்காவல் உத்தரவு
இவ்வாறு மரக்கறி விற்பனை என்ற போர்வையில் போதைப்பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேகநபர் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவினை பெற்ற நிந்தவூர் பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ்.நிசாந்த வெதகே தலைமையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









