மன்னார் மாவட்டத்தில் இதுவரை பதிவாகிய கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விபரம்
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 182 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,இந்த மாதம் புதிய தொற்றாளர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன் சுதாகர் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நாள் முதல் தற்போது வரை 8 ஆயிரத்து 702 பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவற்றில் தற்போது வரை 182 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஜனவரி மாதம் மாத்திரம் 165 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பெப்ரவரி மாதம் 75 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டும் தற்போது வரை புதிய தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.
தற்போது மன்னார் மாவட்டத்தின் பஸார் பகுதி பாதுகாப்பான பிரதேசமாகவும், அதில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாததினால் மக்கள் அச்சம் இன்றி உரிய சகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மன்னார் பஸார் பகுதி மற்றும் நகர பகுதிக்கும் வந்து தமது நாளாந்த கடமைகளை மேற்கொள்ள முடியும்.
மேலும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை மன்னார் மாவட்டத்தில் சுகாதார துறையினருக்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 1132 சுகாதார பணியாளர்களில் 980 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 86.5 வீதம் அடைவு நிலையை அடைந்துள்ளது. இது வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் அதிகமான அடைவு நிலையில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.