நீரின்மையால் அழிவடைந்த மருதங்குள விவசாயிகளின் 35 ஏக்கர் நெற்செய்கை
திருகோணமலை-புல்மோட்டை மருதங்குள விவசாயிகளின் 35 ஏக்கர் நெற்செய்கை முறையான
நீர்முகாமையின்மையால் அழிவடைந்துள்ளது.
புல்மோட்டை 04ம் வட்டாரம் மருதங்குள விவசாய சம்மோளனத்திற்குட்பட்ட பாலங்குளத்தில் நீர்கொள்ளும் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் அருகிலுள்ள சின்ன மருதங்குளத்தையும் இணைத்து நீர் விநியோகம் செய்வதென மார்ச் மாதம் இடம்பெற்ற மருதங்குள விவசாய சம்மேளனத்தின் சிறுபோக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, முற்பகுதி 35 ஏக்கர் மற்றும் பிற்பகுதி 35 ஏக்கர் என மொத்தம் 70 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏமாற்றப்பட்ட விவசாயிகள்
பாலங்குளத்து நீர் முடிவடைந்ததையடுத்து சின்ன மருதங்குளத்திலிருந்து தமது விவசாயத்திற்காக பிற்பகுதி விவசாயிகள் நீரைக்கோரியுள்ளனர்.
இதன்போது பாலங்குளத்திலிருந்து பிற்பகுதி 35 ஏக்கருக்குமான நீரை பெறுவதென தீர்மானிக்கப்பட்டதாக மாற்றி எழுதப்பட்ட கூட்டத்தீர்மானம் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டள்ளது.
அதிர்ச்சியடைந்த விவசாயிகள் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் 15 நாட்களாக கடமையில் இல்லாத காரணத்தால் விவசாய சங்க நிர்வாகிகளுடன் பொலிஸார் சமரச பேச்சில் ஈடுபட்டு ஒரு தடவை நீர் விநியோகிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. அதனையடுத்து இதுவரையிலும் நீர் விநியோகிக்கப்படாததால் நெற்செய்கை முற்றாக அழிவடைந்து காணப்படுகின்றது.
அழிவடைந்து செல்லும் விவசாயத்திற்கு நீர்பாய்ச்சுவதற்கு விவசாய சங்கத்தின் 08 உறுப்பினர்கள் முயற்சிகளை மேற்கொண்ட போது அந்த முயற்சிகளை முறியடித்த கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் என்.றனூஸ் வட்டசேவையாளருக்கு கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளார்.
இதற்கிடையில், நீர்பாய்ச்சப்படாத வயலுக்கப்பாலுள்ள சிலரது
செல்வாக்கை பயன்படுத்தி அவர்களது வயலுக்கு மாத்திரம் நீர்
விநியோகிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் உதவியை கோரிய விவசாயிகள்
இதை அறிந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது வயலுக்குமான நீரை பெற்றுத்தரக்கோரி புல்மோட்டை- 04ம் வட்டார கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், புல்மோட்டை கமநல சேவைகள் நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர், கம நல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் என பலரையும் அழைத்து சென்று நீர் விநியோகத்திலுள்ள பாகுபாட்டினை காண்பித்துள்ளனர்.
இதன்பின்னர், மூன்று ஏக்கருக்கு ஒருமுறை மாத்திரம் நீர் விநியோகிக்கப்பட்டு நிறுத்தப்பட்டதை தவிர தமக்கான எந்த நியாயமும் கிடைக்காமல் பயிர்கள் அழிவடைந்துவிட்டதால் விவசாயிகள் பெரிதும் அதிருப்தியில் உள்ளனர்.
சட்டபூர்வமாக செய்கை செய்யப்பட்ட மேற்படி நெற்செய்கைக்கு பயிர் காப்புறுதி பெறப்பட்டுள்ளதுடன் அரச மானிய சேதன உரங்கள் வழங்கப்பட்டும் அதற்கான பற்றுச்சீட்டுக்கள் இன்னும் வழங்கப்படாமல் இருப்பது விவசாயிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றி எழுதப்பட்ட சிறுபோக கூட்டறிக்கையில் விவசாய போதனாசிரியர், கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என யாருடைய கையொப்பங்களும் இல்லாததால் அது தொடர்பில் தமக்கு தெரியாதென அவர்கள் கைவிரித்துள்ளனர்.
விவசாயிகள் அடைந்த நட்டம்
தற்போதைய பொருளாதார நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நீர் கொள்ளளவில்லாத குளத்தை குறிப்பிட்டு பாமர விவசாயிகளை 35 ஏக்கர் நெற்செய்கைக்கு அனுமதித்துள்ளனர்.
விவசாயிகளை கடன்பட்டு முதலீடு செய்ய வைத்து இரசாயன உரங்கள்கள், பூச்சி நாசினிகள், காவல் கூலி வேலியமைத்தல், உளவு கூலி, விதை,நெல் கொள்வனவு என பல இலட்சங்கள் செலவு செய்து நட்டமடைந்துள்ளனர்.
இதற்கு முழுக்காரணமாக இருந்து தமது கடமைகளை உதாசீனம் செய்த புல்மோட்டை கம நல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் றனுஸ் அவர்கள் மற்றும் மருதங்குள விவசாய சம்மேளன தலைவர் ஜனாப் பரீத் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும் என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், குளத்தின் நீர் கொள்ளளவு தொடர்பாக திருகோணமலை கம நல அபிவிருத்தி திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் அறிக்கை பெறப்படாமை ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.