எரிவாயு சிலிண்டர்களுக்காக வரிசையில் காத்திருந்து ஏமாற்றதுடன் வீடு திரும்பிய மக்கள் (Photos)
மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் கடந்த சில மாதங்களாக எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இடைக்கிடையில் எரிவாயு விநியோகம் இடம்பெற்ற போதிலும் முழுமையாக எரிவாயு தட்டுப்பாடு நீங்கவில்லை என மலையக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம்(12) ஹட்டன், கொட்டகலை உள்ளிட்ட நகரங்களில் எரிவாயு பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
அவ்வாறு காத்திருந்த அதிகமானவர்களுக்கு எரிவாயு பெற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் இன்று அதிகாலை முதல் எரிவாயு சிலிண்டர்களுக்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றதுடன் வீடு திரும்பினர்.
இன்று குறித்த மைதானத்தில் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படவுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அதிகாலை முதல் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
ஆயினும் குறித்த இடத்தில் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுவதற்கான எவ்வித ஏற்பாடுகளும் இல்லாத நிலையிலும் மக்கள் வெளியேறாமல் காத்திருந்தனர். இதேநேரம் பலர் எவ்வாறாயினும் எரிவாயு சிலிண்டர்களை பெற்றே குறித்த இடத்தைவிட்டு நகர்ந்து செல்வோம் எனவும் சிலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
சித்திரைப்புத்தாண்டை கொண்டாடுவதற்கு கூட தம்மால் முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் கவலையுடன் கருத்து தெரிவித்தனர். பலர் தமது தொழிலுக்கு செல்லாமல் கூட எரிவாயு சிலிண்டர்களுக்காக காத்திருந்தனர்.
இன்னும் சிலர் தூர பிரதேசத்தில் இருந்து ஆட்டோ கூலியும் கொடுத்து குறித்த இடத்திற்கு வருகை தந்து ஏமாற்றத்துடன் காத்திருந்தனர். ஆகவே குறித்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்;டவர்கள் நடவடிக்கை எடுத்து மக்கள் குறை தீர்க்க முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.





