தேசபந்துவுக்கு நேர்ந்த நிலை! காரணத்தை கூறும் ஜனாதிபதி அநுர
நாட்டில் சர்ச்சைக்குரிய பல வழக்குகள் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
பெலியத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொலிஸ் மா அதிபருக்குரிய கடமைகளை நிறைவேற்றாமல் அரசியல்வாதிகளுக்காக பணி புரிந்தமையினாலேயே தேசபந்து தென்னகோனுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
விரைவில் வழக்குத் தாக்கல்...
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மோசடி செய்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக நாம் மோதுவதற்கு தயாராக இருக்கின்றோம். அவர்கள் எவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபட்டாலும், நாம் அவர்களுக்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என்பதை உறுதி செய்கின்றோம்.
நாம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு பொருத்தமானவர்களை நியமித்துள்ளோம். அவர்கள் இந்த விடயத்தினை முன்னெடுத்துச் செல்கின்றனர். சட்டமா அதிபர் திணைக்களம் அது தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து வருகின்றது. தற்போது பலருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மேல் நீதிமன்றத்தில் வழக்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நான் நினைக்கின்றேன், மே மாதமாகும் பொழுது சர்ச்சைக்குரிய அனைத்து வழக்குகளும், முன்னெடுக்கப்படும். எமக்கு இது போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களுக்கு வழக்குத் தாக்கல் செய்ய மட்டுமே முடியும். அவற்றை விசாரித்து சிறைத் தண்டனை வழங்க நீதிமன்றத்திற்கே அதிகாரமுள்ளது.
இலங்கையில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று யாரும் நினைக்கவில்லை. பெரிய பதவி மற்றும் சிறிய பதவி என்ற வேறுபாடு இல்லாமல் நாம் விசாரணைகளை மேற்கொள்கின்றோம்.
பொலிஸ் மா அதிபருக்குரிய கடமைகளை நிறைவேற்றாமல் அரசியல்வாதிகளுக்காக பணி புரிந்தமையினாலேயே தேசபந்து தென்னகோனுக்கு இந்த நிலை ஏற்பட்டது.
பொலிஸாருக்கு சுதந்திரமான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் தேவைகளுக்காக நாங்கள் அவர்களைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு அனுமதிப்பதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
