எரிபொருள் தட்டுப்பாடு: பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட அறிவிப்பு
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற பொதுமக்களின் அச்சத்திற்கு மத்தியில், எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதி வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகச் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மேலாளர் மயூரா நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
மார்ச் 31 வரை திட்டமிடப்பட்ட எரிபொருள் கப்பல்கள் வருகை தந்துள்ளன. அடுத்தகட்டமாக ஏப்ரல் 6 முதல் 29 வரை மேலதிக விநியோகங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 10% மேலதிக எரிபொருளைக் கூட்டுத்தாபனம் முன்கூட்டியே பதிவு செய்துள்ளது. அதிகாரிகளின் உறுதிமொழிகளுக்கு மத்தியில், கள யதார்த்தம் வேறாக இருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எரிபொருள் கையிருப்பு
சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளைப் பதுக்கி வைப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சில நிலையங்கள் அடுத்த 6 மாதங்களுக்குத் தேவையான எரிபொருளைச் சேமித்து வைக்க 18 எரிபொருள் தாங்கிகளை கோரியுள்ளதாக நெத்திகுமார குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பதுக்கல் நடவடிக்கைகளை CPC முறையாகக் கண்காணிக்கிறதா என்ற கேள்வியை விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.
அரசாங்கம் "பீதியடையத் தேவையில்லை" என்று கூறினாலும், சில இடங்களில் காணப்படும் நீண்ட வரிசைகள் மக்களின் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகின்றன.
அளவுக்கு அதிகமாக எரிபொருளைச் சேமிக்க மக்கள் முயற்சிப்பது, உண்மையில் ஒரு செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.