தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க சர்வதேச சதி:வெளியான தகவல்
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கு சர்வதேச சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்கள் இணைந்து இந்த முயற்சியை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சதித்திட்டம் தொடர்பில் இலங்கை புலனாய்வு பிரிவு தகவல்களை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் டுபாயிலிருந்து இலங்கை அழைத்து வரப்பட்ட பியூமா என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் புலனாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த புலனாய்வு அறிக்கையின் பிரதியொன்று ஜனாதிபதி காரியாலயத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சதித்திட்டம்
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரை கொலை செய்தேனும் யுக்திய நடவடிக்கையை இடைநிறுத்த திட்டமிட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னக்கோனின் பதவி காலம் எதிர்வரும் 26ம் திகதியுடன் நிறைவடைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மூன்று மாத காலப் பகுதிக்கே தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டிருந்தார்.
சிகப்பு எச்சரிக்கை
போதைப்பொருள் ஒழிப்பில் ஈடுபட்டு வரும் பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
டுபாய், இந்தியா மட்டுமன்றி ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், டென்மார்க், ஸ்பெய்ன், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இந்தியா மற்றும் டுபாயில் உள்ள 32 போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக சர்வதேச சிகப்பு எச்சரிக்கை அறிவிப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.