4ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்! அரசுக்கு எதிராகத் தீப்பந்தங்களுடன் களமிறங்கிய பிக்குகள்
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் குழுவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று(19) 4ஆவது நாளாகவும் தொடர்ந்தது.
இந்தப் போராட்டத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில், இரவு வேளையில் தீப்பந்தப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட பிக்குகளும் பொதுமக்களும் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு அரசுக்குத் தமது பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர்.
தீப்பந்தப் போராட்டம்
கடந்த 16ஆம் திகதி மதியம் விகாரமகாதேவி பூங்காவை வந்தடைந்த பிக்குகள், அங்கேயே தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
அன்றைய தினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பூங்காவில் கூடாரம் ஒன்றை அமைக்க முயன்றபோது, பொலிஸாருக்கும் பிக்குகளுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளும் பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டது.

முன்னதாக, கடந்த 16ஆம் திகதி மேற்படி பிக்குகள் குழுவினர் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஒன்றுகூடிப் போராட்டத்தை ஆரம்பித்ததுடன், அதனைத் தொடர்ந்து புத்தசாசன அமைச்சுக்குச் சென்று அமைச்சின் செயலாளருடன் பேச்சில் ஈடுபட்டனர்.
எனினும், அந்தப் பேச்சு எவ்வித தீர்வுமின்றித் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, தமது கோரிக்கைகளுக்குத் தகுந்த பதில் கிடைக்கும் வரை விகாரமகாதேவி பூங்காவிலேயே தங்கியிருந்து போராட்டத்தைத் தொடரவுள்ளதாகப் பிக்குகள் அறிவித்தனர்.
கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்படும் வரை தாம் பூங்காவை விட்டு வெளியேறப் போவதில்லை என்று சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் குழுவினர் உறுதியளித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலுடன் ஆயுதக் கடத்தலும்.. ஷிரான் பாசிக் விவகாரத்தில் நீதிமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்
You may like this...