குவைத்தில் தங்கியிருந்த 35 இலங்கையர்கள் நாடு கடத்தல்
இலங்கைக்கு வர முடியாத நிலையில், குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் இன்று (04) காலை நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இக்குழுவினர் இன்று (04) காலை 06.35 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு ஆண் வீட்டுப்பணியாளரும் 34 பெண் வீட்டுப்பணியாளர்களும் ஆவர்.
இலங்கை தூதரகம் ஏற்பாடு
குவைத் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம், உள்விவகார அமைச்சு, குடிவரவுத் திணைக்களம், நீதி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் இந்த பணியாளர்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பணியாளர்களுக்கு எதிரான வழக்குகள் தீர்க்கப்பட்டு, தற்காலிக கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு, விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு சம்பளம் மற்றும் பிற சலுகைகளை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
