அகதிகள் விவகாரத்தில் அவுஸ்திரேலிய தடுப்பு கொள்கையை பின்பற்ற திட்டமிடும் டென்மார்க்
அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் விவகாரத்தில் அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்புக் கொள்கை போன்றதொரு முறையை திட்டமிட்டுள்ள டென்மார்க் அரசு, தஞ்சக்கோரிக்கையாளர்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் ஒப்பந்தமொன்றை கையெழுத்திட்டுள்ளது.
புலம்பெயர்வு, தஞ்சக்கோரிக்கை, எல்லைக் கட்டுப்பாடுகள், சட்டவிரோத புலம்பெயர்வைக் கட்டுப்படுத்துதல், மனித கடத்தல் விவகாரங்களில் ஒத்துழைப்பது தொடர்பான இந்த ஒப்பந்தம் டென்மார்க்- ருவாண்டா அரசுகள் இடையே கையெழுத்தாகியுள்ளது.
மனித கடத்தல்காரர்கள் இலாபமடையக்கூடிய, ஆபத்தானப் பயணங்களை ஊக்குவிக்கக்கூடிய நியாயமற்ற, நெறிமுறையற்ற தஞ்சம் வழங்கும் தற்போதைய முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தஞ்சக்கோரிக்கைகள் பரிசீலணையை டென்மார்க்குக்கு வெளியே நடத்தும் புதிய தஞ்சக்கோரிக்கை முறையை உருவாக்க டென்மார்க் அரசு விருப்பம் கொண்டுள்ளது,” என டென்மார்க் குடிவரவுத்துறை அமைச்சர் Mattias Tesfaye அந்நாட்டு தொலைக்காட்சியில் தெரிவித்திருக்கிறார்.
அவுஸ்திரேலிய குடிவரவு முறையை முன்னுதாரணமாகக் கொண்டு பொருளாதார குடியேறிகளை தடுக்கும் விதமாக இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என டென்மார்க் தரப்பில் கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருந்தொற்று சூழலினால், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் 1515 பேர் மட்டும் டென்மார்க்கில் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருக்கின்றனர். அதில் 600 பேருக்கு மட்டுமே டென்மார்க்கில் தங்குவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை விமர்சித்துள்ள ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் ஐரோப்பிய இயக்குநர் Nils Muižnieks, “அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து ஐரோப்பிய அரசாங்கங்கள் தப்பிக்கக்கூடிய புதிய மோசமான நிலைக்கு இந்த திட்டங்கள் வழிவகுக்கும்.இது ஐரோப்பாவிலும், உலக அளவிலும் ஆபத்தானப் போக்கை உருவாக்கும்,” எனக் கூறியிருக்கிறார்.
கடந்த 2018ம் ஆண்டில் இஸ்ரேல்- ருவாண்டா இடையே கையெழுத்தான இதுபோன்றதொரு ஒப்பந்தத்தத்தின் மூலம், ருவாண்டா அரசு ஏற்றுக்கொள்ளும் ஒரு ஆப்பிரிக்க அகதிக்கு 5000 டாலர்களை கட்டணமாக இஸ்ரேல் அரசு ருவாண்டாவுக்கு செலுத்துகிறது.
கடந்த 1994 ஆண்டில் பெரும் உள்நாட்டுப் போரும், இனப்படுகொலையும் நிகழ்ந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டு வரும் நாடாக ருவாண்டா இருந்து வருகின்றது.
தஞ்சக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்குள் ஏற்றுக்கொண்டு பரிசீலணைக் காலத்தில்
அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பான ஒப்பந்தம்
இஸ்ரேல், லிபியா ஆகிய நாடுகளுடன் கையெழுத்திட்டிருந்த ருவாண்டா அரசு தற்போது
இதே போன்றதொரு ஒப்பந்தத்தை ஐரோப்பிய நாடான டென்மார்க்குடனும்
கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.