மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டு சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி எம்.உதயகுமார் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த வாரம் 02டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒவ்வொரு மாதமும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
டெங்கு ஒழிப்பு
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக சுகாதார அமைச்சும் சுகாதார திணைக்களமும் இணைந்து இன்றிலிருந்து(8) தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை பிரகடனப்படுத்தி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

மழை வெள்ளம் காரணமாக டெங்கு நோய் தாக்கத்தினை தடுக்கும் வகையில் கடந்தவாரம் வீடுகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் அடுத்தகட்டமாக சுற்றுசூழலில் டெங்கு நுளம்பின்தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு பொலிஸார்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினர் இணைந்து வீடுகளில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
வழக்கும் தாக்கல்
இதன்போது நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான சூழல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் சிலருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து சீரற்ற வானநிலை நிலவும் காலப்பகுதி என்ற காரணத்தி;னால் சூழலை தூய்மைப்படுத்தி நுளம்பு தாக்கத்தினை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


