யாழில் அதிகரித்துள்ள டெங்கு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
யாழ். மாவட்டத்தில் இந்த வருடத்தின் இறுதி வரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளிகள் 2203 பேர் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தி குறிப்பில், “யாழ். மாவட்டத்தில் நிலவும் மழையுடனான காலநிலைக்குப் பின்னர் நவம்பர் மாத இறுதி வாரத்தில் இருந்து டெங்குநோயின் பரம்பல் சடுதியாக அதிகரித்து செல்வதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
டெங்குநோய் பரம்பல்
இந்த வருடத்தின் இறுதிவரையான காலப்பகுதியில் 2203 நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன.
செப்டம்பர் மாதத்தில் 110 நோயாளிகளும், அக்டோபர் மாதத்தில் 118 நோயாளிகளும் நவம்பர் மாதத்தில் 427 நோயாளிகளும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் 82 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
நவம்பர் மாதத்தில் கூடிய நோயாளர்கள் நல்லூர், யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.
நவம்பர் மாதத்தில் அதிகூடிய நோயாளிகள் இனங்காணப்பட்ட நல்லூர் சுகாதார வைத்திய
அதிகாரி பிரிவில் செப்டம்பர் மாதத்தில் 19 நோயாளர்களும் ஒக்டோபர் மாதத்தில்
23 நோயாளர்களும் நவம்பர் மாதத்தில் 108 நோயாளர்களும் டிசம்பர் மாதத்தின் முதல்
மூன்று நாட்களில் மாத்திரம் 34 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகளவான நோயாளர்கள் கொக்குவில், கோண்டாவில், திருநெல்வேலி மற்றும் வண்ணார்பண்ணை ஆகிய பிரதேசங்களில் இருந்து இனங்காணப்பட்டுள்ளனர்.
டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை
டெங்கு நோயின் பரம்பல் சடுதியாக அதிகரிக்கும் இந்த சூழ்நிலையில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உடனடியாக துரிதப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலகங்களில் அவசர டெங்கு தடுப்பு செயலணி கூட்டங்கள் இன்று (04) இடம்பெற்றன.
இதன் அடுத்தகட்டமாக கிராமிய மட்ட டெங்குத்தடுப்பு செயலணி கூட்டங்களை உடனடியாக நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உடனடியாக சிரமதான பணிகள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும்.
பொதுமக்கள் தமது வீடுகளையும் வீட்டுச் சுற்றாடலையும் பார்வையிட்டு டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை அழிக்க வேண்டும்.வீட்டுச் சுற்றாடலில் காணப்படும் நீரேந்தும் கொள்கலன்களான சிரட்டைகள், இளநீர்க் கோம்பைகள், தகரப்பேணிகள், பிளாஸ்ரிக் பாத்திரங்கள், ஐஸ்கிறீம் கப், பொலித்தீன் பைகள், பழைய ரயர்கள், தண்ணீர்ப் போத்தல்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும்.
குறிப்பாக சேகரிக்கப்படும் கொள்கலன்களை உள்ளுராட்சி மன்றங்கள் அகற்றுவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளன. பாடசாலைகளில் அதிபர் ஆசிரியர்களின் மேற்பார்வையின் கீழ் மாணவர்கள் சிரமதான அடிப்படையில் பாடசாலை வளாகத்தில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்க வேண்டும்.
அரச தனியார் அலுவலகங்கள் வர்த்தக நிலையங்கள் வணக்கஸ்தலங்கள் பொதுச் சந்தைகள் போன்ற இடங்களைச் சிரமதான அடிப்படையில் சுத்திகரிக்க வேண்டும்.
பராமரிப்பின்றி காணப்படும் காணிகள் மற்றும் வீடுகளை உரிமையாளர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் உடனடியாக துப்பரவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளல் வேண்டும்.
தற்போதைய காலப்பகுதியில் காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக தகுந்த வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன் பொது மக்கள் அனைவரும் டெங்குநோயைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |