பருத்தித்துறையில் 284 இடங்களில் அதிரடிச் சோதனை - 16 இடங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை
பருவமழை நெருங்கி வரும் நிலையில், டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சமூக மட்டத்திலான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் பருத்தித்துறையில் நேற்று (21.11.2026) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, நுளம்புக் குடம்பிகள் காணப்படும் வகையில் சூழலைப் பேணிய 15 குடியிருப்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட தும்பளை கிழக்குக் கிராம சேவையாளர் பிரிவில், பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் இந்தச் சமூக மட்டத்திலான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தச் செயற்றிட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலகம், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து பங்குபற்றினர்.
இந்தக் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள வீடுகள், வியாபார நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விரிவான களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

நுளம்புகள் பெருகக்கூடிய அபாயகரமான சூழல்
மொத்தமாக 284 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், 118 இடங்கள் நுளம்புகள் பெருகக்கூடிய அபாயகரமான சூழல்களாக அடையாளம் காணப்பட்டன.
மேலும், 16 இடங்களுக்குச் சிவப்பு அறிவித்தல்கள் வழங்கப்பட்டதுடன், நுளம்புக் குடம்பிகள் காணப்படும் வகையில் சுற்றாடலைப் பராமரித்த 15 குடியிருப்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

