வவுனியாவில் பொலிஸாரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
வவுனியாவில் பொலிஸாரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் அதிகளவிலான மக்கள் வந்து செல்லும் புதிய பேரூந்து நிலையப் பகுதியில் குறித்த நடவடிக்கை இன்று (24.04.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய சமுதாய பொலிஸ் குழுவால் குறித்த செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு கட்டுபாட்டு நடவடிக்கை
அத்துடன் வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் சமுதாய பொலிஸ் குழுவினரும் இதில் கலந்து கொண்டு டெங்கு கட்டுபாட்டு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த நடவடிக்கையின் போது புதிய பேரூந்து நிலையம், கண்டி வீதியோரம் என்பவற்றில் வீசப்பட்டிருந்த போத்தல்கள், பிளாஸ்ரிக் பொருட்கள் என்பன அகற்றப்பட்டதுடன், நீர் வடிகால்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.