மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள பகுதிகளில் டெங்கு நோய் பரவாத வகையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக்கின் வழிகாட்டலில் நாளாந்தம் பல வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
டெங்கு பரவும் இடங்கள் பரிசோதனை
அந்தவகையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் தலைமையிலான சுகாதார பரிசோதகர்கள், அலுவலக டெங்கு பிரிவு உத்தியோகத்தர்கள், ஓட்டமாவடி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று டெங்கு பரவும் இடங்களை பரிசோதனை செய்துள்ளனர்.
இதன்போது டெங்கு பரவும் வகையில் சூழலில் பொருட்களை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதுடன் குறித்த பொருட்கள் ஓட்டமாவடி பிரதேச சபை உத்தியோகத்தர்களால் அகற்றப்பட்டுள்ளன.
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்
டெங்கு நோயின் தாக்கத்தை உணர்ந்து பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்பதுடன், வீடுகளில் நீர் தேங்கியிருக்கும் இடங்களை அகற்றி, டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுத்து, எமது சுற்றுப்புற சூழலை சுகாதாரமான முறையில் பேணுமாறு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






