கர்பலா அல்மனார் வித்தியாலய அதிபரை உடனடியாக இடமாற்றுமாறு ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக்கோட்டத்திலுள்ள கர்பலா அல்மனார் வித்தியாலய அதிபரை உடனடியாக பாடசாலையை விட்டு இடமாற்றுமாறு கோரி, மாணவர்களும்,பெற்றோர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாடசாலையின் அதிபர், மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அங்கு வருகை தந்த காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன், இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மத்தி வலய கல்விப்பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எஸ்.உமர் மௌலானாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
வலயக் கல்விப் பணிப்பாளரின் நடவடிக்கையின் கீழ், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வியலுவகத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.ரமீஸ் தலைமையில் பாடசாலைக்கு வருகை தந்த அதிகாரிகள் குழு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுடன், மூன்று வாரங்களுக்குள் இதற்கான தீர்வை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடமும் தனித்தனியாக அதிபருக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களையும் எழுத்து மூலம் பெற்றுக்கொண்டனர்.









