மனித உரிமைகள் தினத்தில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட பேரணி: தம்பிராசா செல்வராணி அழைப்பு
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நாளை மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.
நேற்று (08.12.2022) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் அத்தினத்திலே வடக்கு கிழக்கிலே எட்டு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
ஆர்ப்பாட்ட பேரணி
அந்த வகையில் வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்களும் ஒன்றிணைந்து வவுனியாவில் கந்தசாமி கோவிலில் இருந்து பேரணி ஆரம்பித்து பழைய பேருந்து நிலையம் வந்தடைந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேபோல் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களும் இணைந்து மட்டக்களப்பில் கல்லடிப் பாளத்தில் இருந்து பேரணி ஆரம்பித்து காந்திப் பூங்கா வந்தடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்திலே இந்த நாட்டிலே எங்களுக்கான உரிமைகள் மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் எங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாமல் இருக்கின்றோம்.
நீதி தேடும் போராட்டம்
எமது உறவுகளுக்கான நீதி தேடும் போராட்டங்களைக் கூட எம்மால் சுதந்திரமாக முன்னெடுக்க முடியாமல் இருக்கின்றது.
நாங்கள் பதின்மூன்று வருடங்களாக எங்கள் பெறுமதியான மனித உயிர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றோம். எமது உயிர்கள் வலுக்கட்டாயமாக வலிந்து காணாமலாக்கச் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
எந்தவித மனித உரிமைகளும் பேணப்படாத நிலையில் எதிர்வரும் நாளை (10.12.2022) சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் எதிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்திருக்கின்றோம்.
இப்போராட்டத்திற்கு கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியற் பிரமுகர்கள், ஊடகவியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் வலுச்சேர்த்து இப்போராட்டத்தில் எங்களுடன் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்து பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவை தொடங்கிய ஜீ தமிழ்.. அர்ச்சனா தொகுப்பாளினி, நடுவர்கள் யார் யார்? Cineulagam
