யாழ். சென்ற ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் - இடதுசாரிக் கட்சி கண்டனம்
யாழில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்க சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்தினரும், பொலிஸாரும் வீதித் தடைகள் மற்றும் நீர்த்தாரை பிரயோகங்கள் மேற்கொண்டதை நாட்டின் பழைமையான இடதுசாரிக் கட்சியான நவ சமசமாஜக் கட்சி கண்டித்துள்ளது.
இது தொடர்பில் நவ சமசமாஜக் கட்சியின் அரசியல் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்கும் அவர்கள் எதிர்பார்த்த நீதியை பெற்றுக் கொடுப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுவரை எந்த நம்பகத்தன்மையான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் தனது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி கோரிய மக்கள் போராட்டம்
இவ்வாறான சூழ்நிலையில் நீதி கோரி மக்கள் போராட்டம் நடத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 13ஆவது திருத்தச் சட்டம், சமூக நீதி ஆணைக்குழுவை முழுமையாக நடைமுறைப்படுத்துகின்றமை குறித்து ஜனாதிபதியின் உரைகள் இனிமையாக இருக்கலாம், ஆனால், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழர்களின் காணி அபகரிப்பு, அரசியல் கைதிகளின் நீண்டகாலத் தடுப்பு, சிவில் ஆட்சியில் இராணுவத் தலையீடுகள் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு அவசியம் எனறும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




