மிதி வண்டிகளின் விலைகள் 100 வீதமாக அதிகரிப்பு
டொலர் பிரச்சினை காரணமாக மிதி வண்டிகளின் விலைகள் நூற்றுக்கு நூறு வீதம் உயர்ந்துள்ளதாக மிதி வண்டி தயாரிப்பாளர்கள் மற்றும் பொருத்துநர்கள் சங்கத்தின் செயலாளர் றிஸ்னி இஸ்மத் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், சுமார் 18 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மவுன்டன் ரக மிதி வண்டி மற்றும் பெண்களுக்கான மிதி வண்டி என்பவற்றின் விலைகள் 36 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
ஆடம்பர பொருட்களின் பட்டியலில் மிதி வண்டிகள்
சாதாரணமாக மிதி வண்டிகளுக்கான உதிரிப் பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, இலங்கையில் பொருத்தப்படுகின்றன.
மிதி வண்டிகளுக்கான உதிரி பாகங்கள் ஆடம்பர பொருட்கள் பட்டியலில் சேர்ககப்பட்டு 55 வீதம் வரி அறவிடப்படுவதால், மிதி வண்டிகளின் விலைகளை அதிகரிக்க நேரிட்டுள்ளது.
மிதி வண்டி உதிரிப் பாகங்களை ஆடம்பர பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கி, வரியை பூஜ்ஜியமாக குறைத்தால், ஒரு மிதி வண்டியை 19 ஆயிரம் ரூபாவுக்கு நுகர்வோருக்கு வழங்க முடியும்.
பழுதடைந்த மிதி வண்டிகளை திருத்தி பயன்படுத்தும் மக்கள்
எவ்வாறாயினும் மிதி வண்டிகளின் விலைகள் அதிகரித்தாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக சந்தையில் கேள்வி அதிகரித்துள்ளது.
மிதி வண்டிகளை கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ள மக்கள் விலை அதிகரிப்பு காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் இஸ்மத் கூறியுள்ளார்.
இதனிடையே அதிகரித்துள்ள எரிபொருள் விலைகளை கவனத்தில் கொண்டு பலர் தமது வீடுகளில் பழுதடைந்த நிலையில் ஒதுக்குப் புறமாக வைத்திருந்த மிதி வண்டிகளை திருத்தி பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.