கொழும்பில் கோவிட் தொற்று உறுதியானோரில் 30 வீதமானவர்கள் டெல்டா திரிபால் பாதிப்பு
கொழும்பு நகரில் கோவிட் தொற்று உறுதியானவர்களில் 30 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
நாள் தோறும் கொழும்பில் 550 முதல் 600 வரையிலான கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகின்றனர் எனவும், இதில் 30 வீதமானோருக்கு டெல்டா திரிபின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிகளவில் தடுப்பூசிகளை ஏற்றுவதன் மூலம் நோய்த்தொற்று பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்புவாசிகளில் 30 வயதுக்கும் மேற்பட்ட 75 வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு வீடு சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்க்பபட உள்ளதாகவும் இதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கிலேயே கொழும்பு நகரின் பிரதான தடுப்பூசி ஏற்றும் நிலையம் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் மரணங்களின் அதிகரிப்பு காரணமாக தகனசாலைகளில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பத்து தகனசாலைகளும் சிராக இயங்கி வருவதாகவும், உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




