கோட்டாபயவை துரத்தும் கர்மவினை! கைது செய்வதில் ஏன் தாமதம் - செல்வம் அடைக்கலநாதன் கேள்வி
"முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தை அழித்தவர்களை, செம்மணி மனிதப் புதைகுழிகளை உருவாக்கியவர்களை, தாய், தந்தையரை நிர்க்கதியாக்கியவர்களை கர்மவினை தற்போது துரத்த தொடங்கியுள்ளது என்றும், கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதில் ஏன் தாமதம் நிலவுகின்றது? என்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுப் நடைபெற்ற பாதுகாப்புப்பணியாள் தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
இனத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள்
"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் காணாமல்போனோர், எமது இனத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி போன்ற விடயங்களில் விசாரணை நடத்தப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபை வெறும் அறிக்கைகளை மட்டும் விடாமல், அதனை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எமது மக்கள் உள்ளக விசாரணையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
நீதியான சர்வதேச விசாரணையையே கோருகின்றோம். தமிழ் அரசியல் கைதிகள் சுமார் 25 ஆண்டுகளாகச் சிறைகளில் வாடுகின்றனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாகப் போராளிகளின் படங்களை வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட இளைஞர்களும் இன்றும் சிறையில் தான் உள்ளனர்.
கோட்டாபயவை கைது செய்வதில் ஏன் தாமதம்
எங்களுடைய தாய், தந்தை உறவுகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பது இன்று ராஜபக்ச குடும்பத்தினருக்கு இப்போது உணர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை ராஜபக்சர்கள் இல்லாது ஒழித்துள்ளனர் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குள்ளான சந்தேகநபரான கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதில் ஏன் இந்த தாமதம் நிலவுகின்றது என்று தெரியவில்லை?
ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கர்மா என்பதனை நான் நம்புவதில்லை. ஆனால், கர்மா என்பது இருக்கின்றது என்பதனை தற்போது உணர முடிகின்றது.
சர்வதேச விசாரணை
எமது இனத்தை அழித்தொழிக்க நினைத்தவர்கள், செம்மணியில் மக்களைப் புதைத்தபோது அவர்கள் பட்ட வேதனைகள் மற்றும் முள்ளிவாய்க்காலில் தாய், தந்தையின் கண் முன்னே பிள்ளைகள் வீழ்ந்தபோது எழுப்பட்ட அழுகுரல்கள் இன்று கர்மா என்ற ரீதியில் செயற்பட தொடங்கியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை தனது கருத்துக்களை அழுத்தமாகக் கூறினாலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான இறுக்கமான வாய்ப்புகளை அது கையாள்வதில்லை.
இதனால் ஐ.நா. சபை மீது எமது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை படிப்படியாக சிதைவடைந்து செல்கின்றது.
இலங்கை அரசு உள்ளக விசாரணையை நிறுத்திவிட்டு, சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும் அடிப்படையை உருவாக்க வேண்டும்.
இந்த அரசு இத்தகைய சரியான செயற்பாடுகளில் ஈடுபடும்போது எமது முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் பல கோடி தங்க நகைகளுடன் சொகுசு வாழ்க்கை! அறிவிப்பின்றி அவசரமாக நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர்