மட்டக்களப்பு மாவட்டத்தில் காடுகளை வெட்டி காணிகளை அடைக்கும் செயற்பாடுகளில் ஊர்காவல் படையினர்:கோவிந்தன் கருணாகரம்
ஒரு நாடு ஒரு சட்டம் என ஜனாதிபதி தெரிவிக்கின்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஒரு சட்டமும், அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொள்ளும் பெரும்பான்மையினத்திற்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பகுதியில் மேய்ச்சல் தரை காணிகளை ஊர்காவல் படையினருக்கு முந்திரிகை செய்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரம் இன்று மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தமல்லி தோட்டம், வெட்டிப்போட்டசேனை போன்ற பல பகுதிகளில் உள்ள சுமார் 1500 காணிகள் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டு வருவதை காணமுடிந்தது.
படுவான்கரை பகுதியில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் போது இங்குள்ள கால்நடைகள் இப்பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காக கொண்டு செல்லப்படுகின்றது.
தற்போது விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ,தற்போது அப்பகுதியில் ஊர்காவல் படையினர் காடுகளை வெட்டி காணிகளை அடைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது குறித்து கால்நடை பண்ணையாளர்களினால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சென்று அங்குள்ள நிலைமைகள் குறித்து கால்நடை பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
நீண்ட காலமாக தாங்கள் இப்பகுதியில் கால்நடைகளை தமது முதாதையர்கள் முதல் மேய்த்து வருவதாகவும், ஆனால் தற்போது தமது மேய்ச்சல் தரையினை சுற்றி முந்திரிகை வளர்ப்பு என கூறி வேலி அமைக்கப்படுவதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தாங்கள் சிறிய மரக்குச்சு வெட்டும் போது தம்மை பொலிஸார் கைது செய்து வழக்கு தாக்கல் செய்வதாகவும், ஆனால் இங்கு பெரியளவிலான தேக்கு மரங்கள் கூட வெட்டப்படும் நிலையில், அதனை யாரும் கண்டு கொள்வதில்லையெனவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
படையினர் முகாம் வேலி அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் முட்கம்பிகள் கொண்டு வெலிகள் அமைக்கப்படுவதன் காரணமாக தாங்கள் மாடு மேய்க்கும் போது பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.






