ஹரக் கட்டாவின் தடுப்புக் காவல் உத்தரவில் கையெழுத்திட பாதுகாப்புச் செயலாளர் மறுப்பு
பிரபல போதைப் பொருள் வர்த்தகரும், பாதாள உலகப் புள்ளியுமான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்கிரமரத்னவுக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவில் கையெழுத்திட பாதுகாப்புச் செயலாளர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
நந்துன் சிந்தக விக்கிரமரத்ன, வெளிநாடொன்றில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது தொடக்கம் கடந்த 2023ம் ஆண்டின் மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையே கடந்த 2023ஆம் ஆண்டு அவர் குற்றபப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டமைக்காக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் அப்போதைய செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்தின, ஹரக் கட்டாவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை தொடர்ச்சியாக தடுப்புக் காவலில் வைத்திருக்கும் உத்தரவொன்றில் கையெழுத்திட்டிருந்தார்.
இந்நிலையில் ஹரக் கட்டாவுக்கு எதிரான uC 4834/23வழக்கு நேற்றைய தினம் கைவிடப்பட்டு, அதே குற்றச்சாட்டுகளின் கீழ் uC 5447/25 இலக்க வழக்கு நேற்று புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை ஹரக் கட்டாவை தொடர்ச்சியாக தடுப்புக் காவலில் வைத்திருக்கும் உத்தரவொன்றை வழங்குமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கையெழுத்திட மறுப்பு
எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா, அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அதன் மூலம் சுமார் இரண்டு வருடங்கள் ஐந்து மாதங்கள் வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹரக் கட்டா,தற்போதைக்கு சாதாரண விளக்கமறியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இஸ்ரேலிய கொடியொன்றை காலால் மிதிக்கும் புகைப்படமொன்றை இணையத்தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து தன் கைபேசியில் வைத்திருந்த ஒரே காரணத்துக்காக சுமார் ஒரு வருடமளவில் சுஹைல் எனும் இளைஞனை தடுப்புக் காவலில் வைத்திருக்கும் உத்தரவில் கையெழுத்திட்டவர் மேற்குறித்த சம்பத் துய்யகொந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




