ஆளும் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பாதுகாப்பு செயலாளர்
அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் கூட்டத்தில் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன ஆகியோர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது குறித்த இருவரும் எதிர்வரம் 9ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பொதுமக்கள் போராட்டம் குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக போராட்டம் தொடர்பாக தாம் சேகரித்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் ஒரு குழு செயற்படுவதாக அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பலரின் பெயர்களை கூறியதாகவும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு செயலாளரிடம் கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதேவேளை, கடந்த மே மாதம் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டமை தொடர்பிலும் பாதுகாப்பு செயலாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகின்றது.
தற்போது போராட்டம் தொடர்பான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதத்தில் கடந்த காலங்களில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.