வவுனியா காடழிப்பு விவகாரம்: விசாரணையில் வெளியான தகவல்
காடழிப்பை வெளிக் கொண்டு வந்த ஆசிரியருக்கு எதிராக போலி முகநூல் மூலம் அவதூறை ஏற்படுத்தியது கிராம சேவகர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் வவுனியா காவல்துறையினர் இன்று (05.05.2023) தெரிவித்துள்ளனர்.
வவுனியா - கட்டையர்குளம் பகுதியில் வன இலாகாவிற்கு சொந்தமான காட்டினை கிராம
அலுவலர் உள்ளடங்களாக சிலர் காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குற்றவியல் பிரிவு முறைப்பாடு
இதனை அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தடுத்து நிறுத்தியதுடன், குறித்த விடயம் தொடர்பில் அரச அதிபர், வவுனியா பிரதேச செயலாளார், வன இலாகா திணைக்களம், பொலிஸார் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றதுடன் ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தனர்.
இதனையடுத்து, கிராம அபிவிருத்திச் சங்கம் சார்பாக செயற்பட்ட அப்பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு கிராம அலுவலர் ஒருவர் தொலைபேசியில் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த ஆசிரியருக்கு எதிராக போலி முகநூல்களில் அவதூறும் பரப்பப்பட்டுள்ளதுடன் கொழுப்பு இலத்திரனியல் குற்றவியல் பிரிவுக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
இதேவேளை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா தொழில்நுட்ப குற்றத்தடுத்து பிரிவு பொலிஸார் குறித்த போலி முகநூல்கள் கிராம அலுவலர் ஒருவருடையது என தெரிவித்துள்ளதுடன், அவரை அழைத்து வாக்கு மூலத்தையும் பெற்றுள்ளனர்.
மேலும் வன இலாகா திணைக்களத்தாலும் கிராம அலுவலருக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், அந்த அலுவலர் தொடர்பில் பிரதேச செயலாளர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.