நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிபதிகள் மீது அவதூறு பரப்புவது கண்டனத்திற்குரியது! - சுரேன் ராகவன்
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன உட்பட சிலர் நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்கு பின்னால் மறைந்துகொண்டு, தலைமை நீதியரசர் மற்றும் நீதிபதிகள் குறித்து அவதூறாகப் பேசுவது முற்றிலும் தவறானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
அதிகபட்ச தண்டனை
"நீதிபதிகள் மற்றும் தலைமை நீதியரசருக்கு எதிரான இத்தகைய அவதூறுகள் தொடர்பில், நீதிச் சேவைகள் ஆணைக்குழுவும் நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுக்களும் உடனடி விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்களுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும்.

மேலும், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலுள்ள 14 நீதிபதிகளையும் உள்ளடக்கிய விரிவான நீதிபதி அமர்வு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
நாட்டில் தற்போதைய நிலவரப்படி உணவுப் பணவீக்கம் 11 வீதமாகவும், பொதுப் பணவீக்கம் 7 வீதமாகவும் உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதாரப் பின்னடைவு மற்றும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரித்தார்.
எல் நினோ காலநிலை மாற்றத்தால் நாட்டின் நெல் விவசாயத்திற்கு ஏற்படவுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள அரசாங்கம் வைத்துள்ள தீர்வுகள் என்ன என்றும், நெல் கொள்முதலை அரசாங்கம் எவ்வாறு முன்னெடுக்கப் போகின்றது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இலங்கையின் ஊடகத்துறை வீழ்ச்சி
மேலும், ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (jVP) தீவிர செயற்பாட்டாளர் என்ற ஒரே காரணத்திற்காக, கணேசன் என்பவர் சென்னையின் துணை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், தகுதியான பல நபர்கள் இருக்கும் நிலையில் இந்த நியமனத்தை மாற்றுமாறும் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையின் ஊடகத்துறை வீழ்ச்சியடைந்து வருவது குறித்தும் கவலை வெளியிட்ட அவர், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் தாமதம் காட்டுவது ஏன் என வினவினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியிலேயே தாம் இணைந்த எதிரணியில் அமர்வதாகவும், தனிப்பட்ட சிலரின் கருத்துக்களுடன் தமக்கு உடன்பாடில்லை எனவும் குறிப்பிட்ட அவர், முன்னாள் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவைப் பதவியிலிருந்து நீக்கப் பாடுபட்ட வழக்கறிஞர்கள் சிலர் அங்கு இருப்பதாகவும், அத்தகைய செயற்பாடுகளுடன் தம்மால் ஒருபோதும் உடன்பட முடியாது எனவும் சுரேன் ராகவன் மேலும் தெரிவித்துள்ளார்.