இலங்கையில் வீழ்ச்சி காணும் மத சுதந்திரம்: அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம்(USCIRF) நடத்திய மெய்நிகர் விசாரணையில், இலங்கையில் மத சுதந்திரம் வீழ்ச்சி கண்டு வருவதாக பலரும் கருத்துரைத்துள்ளனர்.
உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான ஆண்டுகளில், சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு - குறிப்பாக தமிழ் கிறிஸ்தவர்கள், தமிழ் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிராக மத பதற்றங்கள் அதிகரித்தன.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள கோவில்கள் உட்பட்ட வழிபாட்டுத் தலங்களை அபகரிக்கும் முயற்சிகள் இந்த பதற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
இந்தநிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டம்,சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டம் மற்றும் இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் உட்பட மதச் சிறுபான்மையினரை விகிதாசாரத்தில் குறிவைக்கும் பல கொள்கைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது என்றும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிகழ்வில் மனித உரிமை சட்டத்தரணியும்,பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கருத்துரைக்கையில், 'குருந்துமலை ஆலய விவகாரம் இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையிலான பிரச்சினையல்ல, சிங்களம் மற்றும் தமிழர்களுக்கிடையிலான பிரச்சினையாகும் என்று குறிப்பிட்டார்.
சிங்களவர்கள் இந்தப்பகுதிக்கு உரிமை கோருவது தமிழ் பௌத்தர்களுக்கு அவர்கள் இடமளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை என்பதை காட்டுகிறது.
இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மதுர ராசரத்தினம்,வடக்கு கிழக்கின் தமிழ் பேசும் பிரதேசங்களில் அரச அனுசரணையுடன் சிங்களமயமாக்கல் மற்றும் பௌத்தமயமாக்கல் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் தையிட்டி, மட்டக்களப்பில் மயிலத்தமடு, முல்லைத்தீவில் நீராவியடி போன்ற வடகிழக்கில் உள்ள பல இடங்களையும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று ஐந்து வருடங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை எவரும் பொறுப்புக் கூறப்படவில்லை என இலங்கையின் தேசிய கிறிஸ்தவ சுவிசேசக் கூட்டணியின் தலைவர் மைக் கேப்ரியல் ஆணையகத்திடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், பெண்கள் செயல் வலையமைப்பின் இணை நிறுவனர் செரீன் அப்துல் சாரூர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் இலக்குகளாக முஸ்லிம்கள் மாறியிருப்பதாக தெரிவித்தார்.
சர்வதேச நெருக்கடிக் குழுவின் சிரேஸ்ட ஆலோசகர் அலன் கீனன், தமது கருத்தில், ஜனாதிபதியிடமிருந்து தெளிவான எதிர்வினை இல்லாததாலும், அவரின்; குறுகிய கால அரசியல் தேவையின் காரணமாக, வலுவாகத் தலையீடு செய்வதில் தயக்கம் இருக்கக்கூடும் என்று குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |