இலங்கையில் மனநல மருத்துவர்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சி
இலங்கையில் மனநல மருத்துவர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் மனநல விசேட மருத்துவ நிபுணர் பேராசிரியர் சதுரி சுரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மனநல மருத்துவர்களின் எண்ணிக்கை
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் மனநல மருத்துவர்களின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்டளவு குறைபாடு காணப்படுகிறது.
ஏனெனில் இலங்கையிலுள்ள மனநல மருத்துவர்களுக்கு அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) ஆகிய நாடுகளில் எந்நேரமும் வேலைவாய்ப்புகள் உள்ளன.
மனநல மருத்துவர்களுக்கு வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளது. இவ்வாறு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது, மனநல மருத்துவர்களின் பற்றாக்குறைக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

தொடர் சிக்கல்
மேலும் இங்கு வழங்கப்படும் பயிற்சியும் பெரிதும் மதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தச் சிக்கல் தொடர்ச்சியாக நிலவுகிறது.
தற்போது சுமார் 100 முதல் 120 வரையிலான விசேட மனநல மருத்துவர்கள் உள்ளனர். அவர்களிடம் சிகிச்சை பெற வரும் நோயாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் கிளினிக் மற்றும் தேசிய மனநல நிறுவனத்தின் கிளினிக் ஆகிய இரண்டிலும், ஒரு காலை நேர கிளினிக்கிற்கு மட்டும் சுமார் 150 நோயாளர்கள் வருகை தருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.