சட்டத்தரணிகளை தலைமை பரிசோதகர்கள் நிலைக்கு நியமிக்க முடிவு
இலங்கையின் பொலிஸ்துறையில் 150 சட்டத்தரணிகளை தலைமை பரிசோதகர்கள் நிலைக்கு நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று இலங்கையின் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
பொலிஸார், பொதுமக்களுக்கு வழங்கும் சட்ட சேவைகளை மேலும் நெறிப்படுத்துவதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நீதி அமைச்சர் அலி சப்ரி விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிறப்பு கலந்துரையாடல் இன்று நீதி அமைச்சர் அலி சப்ரி, காவல்துறையின் உதவி அதிபர் அஜித் ரோஹான, சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ருவன் குணசேகர, ஜனாதிபதியின் ஆலோசகர் யு.ஆர்.டி. சில்வா மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமந்தி பீரிஸ் ஆகியோரின் பங்கேற்றலுடன் நடைபெற்றது.
இதன்படி குறித்த பதவிகளுக்காக அமைச்சின் அனுமதி கிடைத்த பின்னர் சட்டத்தரணிகள், நேர்காணல்கள் மூலம் பொலிஸ் துறையில் இணைக்கப்படுவார்கள்.
ஆட்சேர்ப்பைத் தொடர்ந்து, அவர்கள் ஒன்பது மாகாணங்களை உள்ளடக்கிய சேவைகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
மேலும், அவர்களுக்கு சட்டம் மற்றும் காவல்துறை சேவை குறித்த சிறப்புப் பயிற்சியும் வழங்கப்படும். இந்த தேவையான பயிற்சியை வழங்க சட்டமா அதிபர் திணைக்களமும் இணங்கியுள்ளது.
சட்டத்தை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதும், காவல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளை மேலும் நெறிப்படுத்துவதும் இதன் நோக்கம் என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆட்சேர்ப்பு செய்யும் போது, தமிழ் மொழி பேசும் திறன் கூடுதல் திறமையாக கருதப்படும் என்றும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.