வருமானம் ஈட்டாத கொழும்பு நகர சொத்துக்கள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவு
வருமானம் ஈட்டாத, கொழும்பு (Colombo) மாநகர சபையின் கீழ் வரும் அரசுக்கு சொந்தமான 52 காணிகள் மற்றும் 26 விளையாட்டு மைதானங்களை, மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மாநகரசபை தரப்புகள் தெரிவித்துள்ளன.
கொழும்பு துறைமுக நகரத்திற்கு (Port City) சமாந்தரமாக கொழும்பு நகரை வர்த்தக மற்றும் சுற்றுலா மையமாக மாற்றும் திட்டத்திற்கு இணங்க 99 வருட குத்தகை அடிப்படையில் இந்த காணிகள் மற்றும் மைதானங்களை புனரமைக்க ஏற்கனவே, அவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொழும்பு நகரம் 37 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. அது, 106,068 குடியிருப்புச் சொத்துக்கள், 35,604 வணிகச் சொத்துக்கள், 10158 அரச காணிகள் மற்றும் 3,671 விலக்களிக்கப்பட்ட சொத்துக்கள் என்று நிர்வாக நோக்கங்களுக்காக ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
வாடகை வரி
இந்நிலையில், வரிகள் மற்றும் பதிவுக் கட்டணங்கள் மூலம் வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் சுமார் 67,000இற்கும் அதிகமான பதிவு செய்யப்படாத சொத்துக்கள் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொழும்பில் உள்ள 120,000 வீடுகளில் இருந்து கிடைக்கும் 11 பில்லியன் ரூபாய் வருடாந்த வருமானத்தில் 80 வீதமான வருமானம்,சொத்து மதிப்பீட்டு வாடகை வரியிலிருந்து பெறப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய வருமானம் ஈட்டும் திட்டத்தின்படி, பல பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என்பன விளையாட்டுக் கழகங்கள் அல்லது தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |