பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை விவகாரம்! தமிழக ஆளுநர் எடுத்துள்ள முடிவு
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் கருணை மனு மீது ஜனாதிபதியே முடிவெடுக்க முடியும் என உச்சநீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் ஊடாக தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் உச்சநீதிமன்றில் இதனை அறிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரொபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.
“ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கு பேட்டரி நான் வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான ஒரு ஆதாரத்தை கூட சிபிஐ தரப்பில் இதுவரை கொடுக்கப்படவில்லை. அதனால் இந்த வழக்கில் எனக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, வழக்கில் முன்கூட்டியே விடுவிக்க வேண்டும்” என பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த மாதம் 21ம் திகதி உச்ச நீதிமன்றின் நீதிபதிகள் நாகேஸ்வராவ், அப்துல் நசீர் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து எடுக்கப்பட்ட சட்டப்பேரவை தீர்மானம் குறித்து தமிழக ஆளுநர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவெடுப்பார் என்று மத்திய அரச சட்டத்தரணி தெரிவித்தார்.
விடுதலை தொடர்பான குழப்பத்தை தெளிவுபடுத்தக் கோரி பேரறிவாளன் தரப்பில், கடந்த 22ம் திகதி உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் முன்பு முறையிடப்பட்டது. இதனையடுத்து, பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு வார கால அவகாசத்தில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஒரு வாரத்தில் உச்சநீதிமன்றம் முடிவெடுக்கக் கூறி நிலையில், இன்று, 13வது நாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சார்பில், உச்சநீதின்றில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தேன். சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து முடிவு செய்ய ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
பேரறிவாளனின் கருணை மனு மீது ஜனாதிபதிதான் முடிவெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை வரும் 9ம் திகதி உச்சநீதிமன்றில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கவர்னர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
