திருக்கோவில் பொலிஸ் நிலையத்தாக்குதல்: உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பூதவுடல் நல்லடக்கம்(Photos)
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தாக்குதலில் உயிரிழந்த பாண்டிருப்பைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் அழகரெத்தினம் நவீனனின் (30) பூதவுடல் இன்று பொலிஸ் மரியாதை அணிவகுப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, அம்பாறை வைத்தியசாலையிலிருந்து பொலிஸாரினால் கொண்டுவரப்பட்ட நவீனனின் பூதவுடல் நேற்று ஞாயிறு இரவு 10.30 மணியளவில் காரைதீவு, விபுலாநந்த சதுக்கத்திலிருந்து கல்முனை, பாண்டிருப்பு இளைஞர்கள் சகிதம் அவரது வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
இன்று (27) திங்கள் காலை 10.15 மணியளவில் பொலிஸ் மரியாதை அணிவகுப்புடன் பூதவுடல் பாண்டிருப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதன்போது பெருந்திரளான இளைஞர்கள் பொதுமக்கள் கதறியழுதபடி பங்கேற்றதைக் காணமுடிந்தது.
பூதவுடலை பொலிஸ் கட்டளைச்சட்டத்தின்படி முறைப்படி அவர்களே தாங்கி வந்து, பாண்டிருப்பு இந்து மயானத்தில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.
அதன்பின்பு, கல்முனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் உயரதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு பொலிஸ் மரணக் கட்டளைச்சட்டத்தின்படி பொலிஸ் மாஅதிபரின் செய்தி வாசிக்கப்பட்டு அவர் சார்ஜென்டாக பதவியுயர்வு பெற்றதைப் பகிரங்கமாக வாசித்தனர்.
இரத்தக்கறை காயமுன்னரே இறப்பைச் சந்தித்து இலங்கைப் பொலிஸிற்காக உயிர்நீத்த பொலிஸ் கான்ஸ்டபிள் நவீனன் (8861) டிசம்பர் 24ஆம் திகதி முதல் பொலிஸ் சார்ஜென்டாக பதவி உயர்த்தப்படுவதாக 'பொலிஸ் மாஅதிபரின் செய்தி வாசிக்கப்பட்டது.
பின்னர், அவர் பாவித்த தலைத்தொப்பி, பதக்கங்கள் ஆகியவற்றை நவீனனின் தந்தை அழகரெத்தினத்திடம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உத்தியோகப்பூர்வமாகக் கையளித்தார்.
தொடர்ந்து, பொலிஸார் தமது கடமைகளை நிறைவேற்றி இறுதி மரியாதை செலுத்திய பின்னர் பூதவுடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு 11.42 மணியளவில் அவரது பூதவுடல் கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதில் அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தத் துப்பாக்கிச்சூடுச் சம்பவத்தில் ஒலுவிலைச் சேர்ந்த கே.எல்.எம். அப்துல் காதர், பிபிலையைச் சேர்ந்த டி.பி.கே.பி. குணசேகர, சியம்பலாண்டுவவைச் சேர்ந்த டி.எம்.டி.எச். புஷ்பகுமார ஆகிய 4 பொலிஸார் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெஹிகம உட்பட இரு பொலிஸார் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைதான பொலிஸ் சார்ஜென்ட், ஜனவரி 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த 4 பொலிஸ் அதிகாரிகளினதும் வீடுகளுக்கு பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று (26) விஜயம் செய்ததோடு, அவர்களது குடும்பத்தினருக்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் சார்பில் தனது அனுதாபங்களைத் தெரிவித்திருந்தார்.
மேலும் அமரர் அழகரட்ணம் நவீணனுடன் கடந்த 24ஆம் திகதி திருக்கோவில் பொலிஸ்
நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளான கே. எல். எம். அப்துல்
காதர், டி.பி.கே.பி. குணசேகர மற்றும் டி.எம்.டி.எச். புஷ்பகுமார
ஆகியவர்களுக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/36a8ea3a-16eb-4329-ac27-374a521ee0c2/21-61c9fee8a0f52.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/bc1fe83d-b9f9-4e40-a03a-dc84b034f0ec/21-61c9fee8b90be.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/abe4b310-ebfd-4725-9661-a9a288a6f8f6/21-61c9fee8dcd45.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/316f332d-45a4-4387-be1e-3eff6d27193c/21-61c9fee909b89.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d5788a00-80d2-454d-aea9-e9545dc14642/21-61c9fee923da7.webp)