இலங்கைக்கு ஆதரவாக இடையீட்டு மனு தாக்கல் செய்த இரு நாடுகள்
250 பில்லியன் டொலர்களுக்கான சர்வதேச இறையாண்மைப் பத்திரக் கடனைத் திருப்பிச் செலுத்தாமைக்காக, இலங்கைக்கு எதிராக ஹமில்டன் ரிசர்வ் வங்கி, நியூயார்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதன்மூலம் ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் அமெரிக்காவுடன் இணைந்துள்ளன.
ஏற்கனவே அமெரிக்கா இந்த வழக்கில் இலங்கைக்கு சார்பாக இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு
மேலும் லண்டன் பைனான்சியல் டைம்ஸ் தகவல்படி, இந்த வழக்கை விசாரணை செய்யும் நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிபதியிடம் குறித்த நாடுகளும் இணைந்து 'அமிகஸ் கியூரி' இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளன.
இதன்படி குறித்த வழக்கை 6 மாதங்கள் முடக்க வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு இந்த இரண்டு நாடுகளும் ஆதரவை வெளியிட்டுள்ளன.
இந்த மனுக்களின்படி, இலங்கைக்கான தற்போதைய கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் அதன் பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான நாட்டின் முயற்சிகளை இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டும் ஆதரிக்கின்றன.
மறுசீரமைப்புப் பேச்சு
ஹமில்டன் ரிசர்வ் வங்கியின் தலைவரான சீன - அமெரிக்க முதலீட்டாளர் - பெஞ்சமின்வே, இலங்கைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு, நடந்துகொண்டிருக்கும் மறுசீரமைப்புப் பேச்சுக்களை சீர்குலைக்கக்கூடும் என்று கவலைப்படுவதால், இலங்கை கோரிய ஆறு மாத கால அவகாசத்தை நீதிபதி வழங்க வேண்டும் என்று ஐக்கிய ராச்சியமும், பிரான்ஸூம் கோரியுள்ளன.
கடன் மறுசீரமைப்பு செயல்முறை முடிவதற்குள், ஹமில்டனுக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படுமானால், அது நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




