மாநகரசபையின் 52வது அமர்வில் காரசாரமான விவாதங்கள்
மட்டக்களப்பு மாநகரசபையின் 52வது அமர்வில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதுடன் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் சபை வெளிநடப்பு செய்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வானது இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் (T.Saravanapavan) தலைமையில் ஆரம்பமானது.
முதல்வரின் தலைமையுரையுடன் சபையின் நடவடிக்கைகள் ஆரம்பமானது.
இதன்போது நெதர்லாந்து தூதரகத்திடம் மாநகர முதல்வரினால் முன்மொழியப்பட்ட திட்டங்கள் குறித்து சபைக்கு விளக்கமளித்ததுடன் தம்மால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை சிலர் தங்களது வேலைத்திட்டங்களாக காட்டமுற்படுவதாக இங்கு மாநகர முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படவுள்ள தகன நிலையம் மற்றும் கலாசார மண்டபம், வரவேற்பு வளைவு ஆகியன 200 மில்லியன் ரூபா செலவில் அமைப்பதற்கான திட்டங்களை மாநகரசபையின் வேலைத்திட்டத்தில் தாமதங்கள் இருப்பதன் காரணமாக கட்டிடங்கள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அதனை தடுப்பதற்கு மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் கட்டிடங்கள் திணைக்களத்தின் பொறியியலாளருக்கு தொலைபேசி ஊடாக ஆணையாளர் அச்சுறுத்தல்கள் விடுத்துள்ளதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
தகன நிலையம் இந்த மாநகரசபையின் அவசரமான தேவைப்படுவதன் காரணமாக நிதிக்குழுவில் அனுமதி பெற்று மாநகர முதல்வரின் முன் அனுமதியுடன் கேள்விப்பத்திரம் கோரப்பட்டது.
ஆனால் மாநகரசபை உறுப்பினர் வசந்திகுமார் அவர்களின் கடிதத்தலைப்பில் கடிதம் எழுதப்பட்டு இந்த தகனசாலையினை அமைக்கவேண்டாம் என உறுப்பினர்களின் கையெழுத்துகளுடன் உள்ளுராட்சி ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறான வேலைத்திட்டங்கள் செய்தாலும் அதனை தடுப்பதற்கு ஒரு கூட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது மாநகரசபை உறுப்பினர் சசிரூபன் தான் அக்கடிதத்தில் கையெழுத்திடாத போதிலும் மோசடியாக தனது கையெழுத்தினை மாநகரசபை உறுப்பினர் வசந்தகுமார் (Vasanthakumar) கடிதத்தில் இணைத்துள்ளதாக ஒழுங்குப்பிரச்சினையை கொண்டுவந்தார்.
இதன்போது மாநகரசபை உறுப்பினர் செல்வி கௌரியும் தாங்கள் தகன நிலையம் தேவையில்லையென கையெழுத்திடவில்லையென தெரிவித்துள்ளார்.
மாநகரசபையின் சட்டத்தினை மீறிய வகையில் குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாகவே அது தொடர்பில் கடிதம் எழுதியதாகவும் தகன நிலையம் வேண்டாம் என்று கடிதம் எழுதவில்லையெனவும் உறுப்பினர் வசந்தகுமார் விளக்கமளித்த நிலையில் கையெழுத்துகள் போலியாக சேர்க்கப்பட்டதாக கூறி கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதன்போது வசந்தகுமார் இரண்டு சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கான தடையினை கொண்டுவரும் வகையில் அடுத்த சபை அமர்வில் தான் தீர்மானம் ஒன்றை கொண்டுவரவுள்ளதாக மாநகரசபை முதல்வர் அறிவித்த நிலையில் அது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதன்போது போலி கையெழுத்து தொடர்பான விளக்கம் அளிக்கப்படாத நிலையில் மாநகரசபை உறுப்பினர் வசந்தகுமார் சபை அமர்வில் வெளிநடப்பு செய்வதாக கூறி சபையிலிருந்து வெளியேறிச்சென்றுள்ளார்.
இன்றைய சபை அமர்வின் போது மட்டக்களப்பின் மின்தகனசாலை அமைப்பதற்காக தனது மாநகரசபையின் இம்மாத கொடுப்பனவினை சபைக்கு வழங்குவதாக மாநகரசபை உறுப்பினர் து.மதன் இதன்போது தெரிவித்துள்ளார்.
இன்றைய சபை அமர்வின் போது மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்களுக்கான சபையின் அனுமதிபெற்றப்பட்டதுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் குறித்தும் ஆராயப்பட்டது.









