சூடுபிடித்த பருத்தித்துறை சந்தை விவகாரம்! ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குழப்ப நிலை
பருத்தித்துறை மரக்கறி சந்தையை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றுவது குறித்து வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஜீவன் தலைமையில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(17) காலை 9:30 மணியளவில் ஆரம்பமானது.
இதன்போது, பருத்தித்துறை மரக்கறி சந்தையை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக பருத்தித்துறை நகரசபையால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக அதனை பழைய இடத்திற்கு மாற்றக் கூடாது என ரஜீவன், பருத்தித்துறை நகரசபை தவிசாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரால் எடுக்கப்படும் தீர்மானத்தை நகரசபை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரால் சுட்டிக்காட்டப்பட்டது.
வாதப் பிரதிவாதங்கள்
எனினும், நகரசபையின் தவிசாளர் உட்பட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தம்மால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்குட்படுத்த முடியாது என்ற கருத்துப்பட விவாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு கூடியிருந்த சுயேட்சை கட்சி நகரசபை உறுப்பினர் பிரகாஸ், சந்தையை பழைய இடத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மரக்கறி சந்தையை பழைய இடத்திற்கு மாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் இன்று அதனை பழைய இடத்திற்கு மாற்றக்கூடாது என்றும் வாதிட்டுள்ளார்.
இதனால் சில மணிநேரம் கூச்சல், தர்க்கம் மற்றும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. பருத்தித்துறை வர்த்தக சங்க பிரதிநிதிகளும் மரக்கறி சந்தையை பழைய இடத்திற்கு கொண்டுவரவேண்டும் என்றே தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







