துப்பாக்கிச்சூடுகளால் மாத்திரமின்றி மர்மமான முறையிலும் நாள்தோறும் மரணங்கள் - அரசை சாடும் எதிரணி
இலங்கையில் தற்போது துப்பாக்கிச்சூடுகளால் மாத்திரமின்றி, மர்மமான முறையிலும் ஒவ்வொரு நாளும் பல மரணங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு முன்கூட்டியே தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தகவல் கிடைத்திருக்காவிட்டால் இன்று அவர் உயிருடன் இருந்திருப்பாரா என்பது சந்தேகமே.
ஒவ்வொரு நாளும் பல மரணங்கள்
அவரைப் போன்று எதிர்க்கட்சிகளில் உள்ள அனைவருக்கும் இவ்வாறு உயிர் அச்சுறுத்தல் காணப்படுகின்றது. சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக இவ்வாறு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.

பாதாள உலகக் குழுக்களை அழிப்பதாகக் கூறி, அதன் ஊடாக எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கான முயற்சிகளையே அரசு முன்னெடுக்கின்றது.
வெலிகம பிரதேச சபை தவிசாளர் தனக்கான பாதுகாப்பை எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாகக் கோரியிருந்த போதிலும், அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
இறுதியாக அவரது உயிர் பறிபோனது. எமது நாட்டில் தற்போது துப்பாக்கிச்சூடுகளால் மாத்திரமின்றி, மர்மமான முறையிலும் ஒவ்வொரு நாளும் பல மரணங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமானால் பொலிஸ் அரசியல் மயப்படுத்தப்படுவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |