மொஸ்கோ தாக்குதலின் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு
ரஷ்யா - மொஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி மண்டபம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அவசரகால சேவை பணியாளர்கள் கட்டிடத்தின் இடிபாடுகளில் தொடர்ந்தும் தேடுதல்களை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
தாக்குதல்தாரிகளின் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பின்னர் மண்டபத்துக்கு தீயிட்டபோதே பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் அரங்கிற்குள் நுழைந்து, பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதுடன் அரங்கத்துக்கு தீயிட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணை
எனினும் அவர்கள் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் நாட்டின் எல்லைக்கு அருகில் ரஷ்ய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, தாக்குதல் நடத்தியவர்கள் உக்ரைனுக்குள் செல்ல முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தாக்குதல்தாரி ஒருவர் தாக்குதலைச் செய்ய தனக்கு எப்படி பணம் கொடுக்கப்பட்டது என்பதை விவரிக்கும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
''இந்த தாக்குதல்களை நடத்துவதற்காக தமக்கு 500,000 ரூபிள் தருவதாக உறுதியளிக்கப்பட்டது.
இதில் பாதி தொகை தமது வங்கி செலவு அட்டைக்கு மாற்றப்பட்டது.'' என அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |