அதிதீவிர வானிலையால் நுவரெலியா மாவட்டத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு
மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 75 பேர் இறந்துள்ளதாகவும் 62 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.
அவர் இன்று (1) வெளியிட்ட விசேட உரையில் இதனைக் குறிப்பிட்டார்.
அவர், தொடர்ந்து கூறுகையில் 2691 குடும்பங்களைச் சேர்ந்த 12304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1914 குடும்பங்களைச் சேர்ந்த 8654 பேர் 61 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தங்கல் முகாம்கள்
குறித்த இடைத்தங்கல் முகாம்கள் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குரன்கெத்த, அம்பேகமுவ, தலவாக்கலை, நோர்வுட், நில்தண்டாஹின்ன ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மோசமான காலநிலைக்கு முன்னர் நுவரெலியா மாவட்டத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் சுமார் 80% பேர் மாவட்டத்தை விட்டு பாதுகாக்க வெளியேறிவிட்டதாகவும் இன்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் மின்சாரம் இல்லை என்றும், அதனால் தொலைபேசி வசதிகள் இல்லை என்றும் மாவட்டச் செயலாளர் மேலும் கூறினார்.
தேடுதல்
அத்துடன் அதேநேரம் நுவரெலியா கண்டி வீதி, நுவரெலியா - இராகலை வீதி, நுவரெலியா-வெலிமடை வீதி, தலவாக்கலை பூண்டுலோயா வீதி, லிந்துலை -அக்கரபத்தனை வீதி ஆகிய வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்திற்காக பயன்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

குறிப்பாக மண்சரிவு உள்ளிட்ட பல அனர்த்தங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் தேடுதல் நடைபெற்று வருகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் விவசாய நிலங்களும் முற்றாக பாதிப்படைந்துள்ளது என நுவரெலியா மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார் .