மத்ரஸா மாணவர்களின் இறப்பு : அதிபர் மற்றும் ஆசிரியருக்கு விளக்கமறியல்
அம்பாறை - காரைத்தீவில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், நிந்தவூர் மத்ரஸாவைச் சேர்ந்த அதிபரையும் ஆசிரியரையும், டிசம்பர் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட உழவு இயந்திர சாரதிக்கு உதவியாளராக கடமையாற்றிய இருவரையும் பிணையில் செல்ல சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
2024 நவம்பர் 26 ஆம் திகதி வெள்ளம் காரணமாக பேருந்துகள், கிடைக்காததால் பாடசாலை முடிந்து உழவு இயந்திரத்தில் வீடு திரும்புமாறு குறித்த அதிபர் பாடசாலை சிறுவர்களுக்கு பணிப்புரை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தினர் அறிவுறுத்தல்
உழவு இயந்திரத்திற்கான போக்குவரத்துச் செலவை ஈடுசெய்யும் பணத்தையும் அதிபர் மாணவர்களுக்கு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், முன்னதாக வெள்ளநீர் காரணமாக வீதி பாதுகாப்பற்றது என எச்சரித்து உழவு இயந்திரத்தை போக்குவரத்துக்கு பயன்படுத்த வேண்டாம் என இராணுவத்தினர் அறிவுறுத்தியிருந்த நிலையிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, 11 பாடசாலை மாணவர்கள், சாரதி, உதவியாளர் என மொத்தம் 13 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம், வெள்ள நீரை கடந்து செல்லும் போது பலத்த நீரோட்டம் காரணமாக கவிழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
6 மாணவர்கள்
இந்த சம்பவத்தின் பின்னர் ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் 6 மாணவர்களைக் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன 6 சிறுவர்களும் 12 மற்றும் 16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 5 பேரின் உடலங்கள்; மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை மேலும், உழவு இயந்திர சாரதியினதும் உழவு இயந்திரத்தில் பயணித்த மற்றுமொருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக தகவல் - பாருக்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |