ஈரானின் நீண்டகால உச்ச தலைவர் அலி கமேனியின் மறைவு: தெஹ்ரானில் 4 நாட்கள் பொது முடக்கம்
ஈரானில் மிக நீண்ட காலம் உச்ச தலைவராகப் பதவி வகித்த அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, அந்நாட்டில் தற்போதைய அரசுக்கு ஆதரவாகவும் தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 1989ஆம் ஆண்டு ஈராக் உடனான போருக்குப் பிந்தைய மீள்வடிவமைப்பு காலத்தில் ஈரானின் உச்ச தலைவராக கமேனி பொறுப்பேற்றார்.
திட்டங்கள் விரிவுபடுத்தல்
அவரது வழிகாட்டுதலின் கீழ், ஆயுதப் படைகள், நீதித்துறை, அரசு ஊடகம் மற்றும் மூலோபாய நியமனங்கள் ஆகிய அனைத்தும் அவரது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன.
கமேனியின் ஆட்சிக் காலத்தில், 'இஸ்லாமிய புரட்சிகர காவல்படை' (IRGC) நாட்டின் பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஒரு ஆதிக்க சக்தியாக உருவெடுத்தது. மேலும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிராந்திய எதிரிகளுக்கு எதிரான ஒரு தற்காப்பு அரணாக ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தையும் அவர் பலமடங்கு விரிவுபடுத்தினார்.
மேற்கத்திய நாடுகளுடன் கடுமையான மோதலை ஏற்படுத்திய ஈரானின் அணுசக்தி கொள்கையில், ஈரான் அணு ஆயுதங்களை நாடவில்லை என்று கமேனி தொடர்ந்து வாதிட்ட அதேவேளையில், யுரேனியம் செறிவூட்டுவதற்கான நாட்டின் உரிமையை அவர் தீவிரமாகப் பாதுகாத்து வந்தார்.

கமேனியின் வெளியுறவுக் கொள்கை
பிராந்திய அளவில் நட்பு அரசாங்கங்கள் மற்றும் ஆயுதக் குழுக்களை ஆதரித்த அவரது வெளியுறவுக் கொள்கை ஈரானின் செல்வாக்கை வளர்த்த போதிலும், வளைகுடா அரபு நாடுகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான பதற்றத்தை கணிசமாக அதிகரித்தது.
அவரது மறைவு ஈரானிய அரசை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக, தற்போது அந்நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய புள்ளியாக மாறியுள்ளது. இறுதிச் சடங்கு நிகழ்வுகளை முன்னிட்டு சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை தெஹ்ரான் மாகாணம் முழுவதும் முழுமையாக மூடப்படும் என்று அதன் ஆளுநர் முகமது சாதேக் மொதமதியன் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த "தியாகித் தலைவருக்கு" இறுதி அஞ்சலி செலுத்த நாடெங்கிலும் இருந்து வரும் இலட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் துக்கம் அனுசரிப்பவர்கள் எவ்வித இடையூறுமின்றி நகருக்குள் வந்து செல்வதற்கு வசதியாக, செவ்வாய்க்கிழமை அன்று தெஹ்ரானில் பொது விடுமுறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாத்திமா மொஹஜேரானி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.