ஓமந்தையில் உயிருக்குப் போராடிய காட்டு யானை பரிதாபமாக மரணம்
வவுனியா - ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் கடந்த இரு தினங்களாகப் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வந்த காட்டு யானை ஒன்று, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் கால்நடை வைத்தியர்களின் தீவிர சிகிச்சைப் பலனின்றி இன்று (10.11.2026) பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
அப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகக் கடுமையான காயங்களுடன் அவதிப்பட்டு வந்த குறித்த யானையை காப்பாற்றும் நோக்கில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் கால்நடை வைத்திய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த யானை
யானையின் உயிரைக் காப்பாற்ற மருத்துவக் குழுவினர் தொடர் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், பலத்த காயங்கள் மற்றும் உடல்நிலை மோசமடைந்த காரணத்தினால் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.

யானையின் மரணம் தொடர்பில் உடற்கூற்று பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதுடன், ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மைய நாட்களாக ஓமந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, நெடுங்கேணி பெரியமடுப் பகுதியில் அண்மையில் யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.