வாகனத்தில் பயணம் செய்த இளம் குடும்பஸ்தர்கள் திடீரென மரணம்
மன்னாரில் திடீரென உயிரிழந்ததாக கருதப்படும் இரு இளம் குடும்பஸ்தர்களின் சடலங்கள் நேற்று திங்கட்கிழமை (30) இரவு மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த இரு குடும்பஸ்தர்களின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.
மன்னாரில் இருந்து வாகனம் ஒன்றில் நேற்று திங்கட்கிழமை (30) இரவு நான்கு நபர்கள் கொழும்பு நோக்கி பயணித்த போது மன்னார் உயிலங்குளம் பகுதியில் வைத்து, அதில் பயணம் செய்த இரண்டு இளம் குடும்பஸ்தர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டது.
மர்மமான முறையில் மரணம்
உடனடியாக குறித்த வாகனம் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு வந்தபோது குறித்த இரு குடும்பஸ்தர்களும் வாகனத்தினுள்ளேயே உயிரிழந்தனர்.
இதன்போது மேலும் இருவர் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பேசாலையைச் சேர்ந்த எம்.பிரதீப் (வயது-26) மற்றும் காட்டாஸ் பத்திரியை சேர்ந்த எம்.மசூர் (வயது-35) ஆகிய இரு இளம் குடும்பஸடதர்களே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
விசாரணைகள் ஆரம்பம்
வாகனம் ஒன்றில் 4 பேர் கொழும்பு நோக்கிப் பயணித்த நிலையில் நோய்வாய்ப்பட்டதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது உயிரிழந்த குடும்பஸ்தர்களின் சடலங்கள் யாழ்.வைத்தியசாலைக்கு
அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



