பாலித தெவரப்பெருமவின் மரணச்சான்றிதழை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் மரணச்சான்றிதழ் பிரதியினை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு நேற்று (25) கோட்டை நீதவான் கோசல உத்தரவிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஓய்வுபெற்ற சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்னவை எட்டி உதைத்து காயப்படுத்திய வழக்கில் சந்தேகநபராக மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் மற்றைய சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே நேற்று (25) நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் அவர் நாடாளுமன்றத்தில் நடைபெறும் அமர்வில் பங்கேற்கவுள்ளதாக சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
வழக்கு ஒத்திவைப்பு
சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நேற்றைய தினம் (25ம் திகதி) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார் என்பதை உறுதிப்படுத்தும் கடிதமொன்றை விசாரணையின் மறுநாள் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் கொள்ளுப்பிட்டி பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்து 05.11.2018 அன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்த நிலையில் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் கோட்டை நீதவான் நீதிமன்றில் விடுவிக்குமாறு உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |