சபாநாயகர் மன்னிப்பு கோரியது குறித்து வருத்தப்படும் தயாசிறி ஜயசேகர
“அமைச்சர் அவர்களே” என அழைக்காது “உறுப்பினர் அவர்களே என அழைத்தமை சம்பந்தமாக ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸாநாயக்கவிடம் சபாநாயகர் மன்னிப்பு கோரியது குறித்து வருத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவையில் இருப்போர் அனைவரும் உறுப்பினர்கள்
நாடாளுமன்ற அவையில் இருக்கும் அனைவரும் உறுப்பினர்கள். சபாநாயகர் அழைக்கும் போது அமைச்சரா, ராஜாங்க அமைச்சரா என தேடுகிறார். நாடாளுமன்ற அவையில் நேற்று நான் இல்லாத நேரத்தில் அமைச்சர் சாமர சம்பத்தை சபாநாயகர் சாதாரணமாக உறுப்பினர் அவர்களே என கூறினார்.
அத்துடன் அது முடிந்தது. அமைச்சரா, ராஜாங்க அமைச்சரா என்று தேடுவதில்லை. சபாநாயகர் மன்னிப்பு கோரியமை குறித்து நான் வருத்தப்படுகிறேன். அவையில் இருப்போர் அனைவரும் உறுப்பினர்கள்.
சுதந்திரக்கட்சியின் பிரச்சினைகளை இங்கு பேசி பயனில்லை
அமைச்சர், ராஜாங்க அமைச்சர் என இங்கு அழைப்பதில்லை. அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரச்சினைகளை நாடாளுமன்ற அவையில் பேசி பிரயோசனமில்லை. அவற்றை வெளியில் பேச வேண்டும்.
கோடிக்கணக்கில் செலவிட்டு வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் நடத்தப்படுகிறது. எனது பெயர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு இங்கு ஆற்றிய உரைகளை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், தேடிப்பார்த்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.