தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் உயிராபத்து!மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்து
ஐக்கிய இராச்சியத்தின் மூன்று நீதிபதிகளை உள்ளடக்கிய தீர்ப்பாயம் ஒன்று வழங்கியுள்ள மிக முக்கியமான தீர்ப்பொன்றை அடுத்து அவுஸ்திரேலியா தனது அகதிகள் தஞ்சக் கோரிக்கை தொடர்பான கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டுமென மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இரண்டு இலங்கை தமிழர்கள் தொடர்பாக வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பில் ”அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு பரந்துபட்ட அளவில் வியாபித்திருக்கும் சித்திரவதைகளுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது” என கூறப்பட்டுள்ளது.
அந்தத் தீர்ப்பாயமே பிரித்தானியாவில் குடியுரிமை மற்றும் அகதித் தஞ்சம் குறித்த வழக்குகளை விசாரிக்கும் உயர்மட்ட அமைப்பாகும். இலங்கைத் தமிழ் அகதிகளின் புகலிட கோரிக்கையை தீர்மானிக்க அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானிய அரசுகள் கையாண்ட விதம் குறித்து நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அந்த இரு அரசுகளும் இலங்கையிலுள்ள சூழல்கள் பற்றி மதிப்பீடு செய்த ஒரு அறிக்கையை அளவுகோலாகக் கொண்டு அகதித் தஞ்சக் கோரிக்கைகளைக் கையாண்டு அதன் மீதான முடிவுகளை எடுத்ததாக, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கை நம்பகத்தன்மை கொண்டது அல்ல என, அந்தத் தீர்ப்பாயத்தின் மூன்று நீதிபதிகளும் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். நம்பகத்தன்மை இல்லாத அந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கையிலிருந்து தப்பி அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களுக்கு குறிப்பாகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு அரசுகளும் அமைத்த `உண்மையைக் கண்டறியும் குழுக்கள்` இலங்கை சென்று ஆய்வுகளைச் செய்து அளித்த அறிக்கையை நம்பி அதன் அடிப்படையில் தஞ்சக் கோரிக்கைகளை நிராகரிப்பது பிழையான தீர்மானம் என்பதே அந்தத் தீர்ப்பின் மையக் கருத்தாக அமைந்துள்ளது.
இதன் மூலம் இலங்கையிலிருந்து உயிராபத்திலிருந்து தப்பி அகதி தஞ்சம் கோரி விண்ணப்பித்து அது பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு ஒரு புதுவாழ்வு கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
இது தொடர்பில் அவுஸ்திரேலிய வெளிவிவகாரம் மற்றும் வர்த்தக அமைச்சுக்கு எழுதியுள்ள கடிதத்தில், உண்மை மற்றும் அமைதிக்கான செயற்றிட்ட அமைப்பும், சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய மையமும் பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கையில் நிலவும் சூழல் தொடர்பாக அவுஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கையின், துல்லியத்தன்மை, கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகள், நம்பகத்தன்மை மற்றும் தீர்மானங்கள் ஆகியவை குறித்து கவலைகளையும் கேள்விகளையும் எழுப்பியிருந்தன.
தாங்கள் தெரிவித்திருந்த கருத்துக்கள் மற்றும் கவலைகள் இப்போது உண்மையாகியுள்ளதாக அந்த இரு அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன. அவுஸ்திரேலியாவை போலவே பிரித்தானிய அரசின் உள்துறை அமைச்சு தயாரித்து வெளியிட்ட இலங்கை குறித்த அறிக்கையும், கடுமையாக விமர்சிக்கப்பட்டு தீர்ப்பாயத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
உயர்நிலை தீர்ப்பாயத்தின் தீர்ப்பையடுத்து சர்ச்சைக்குரிய குறிப்பிட்ட பகுதிகளை நீக்கும் நிலைக்கு பிரித்தானிய உள்துறை அமைச்சு தள்ளப்பட்டது. பிரித்தானிய தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பை அடுத்து அவுஸ்திரேலிய அரசு அகதித் தஞ்சம் அளிப்பது தொடர்பான தமது கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.
அவ்வாறு செய்யும் போது, அகதித் தஞ்சம் கோருபவர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அவர்கள் உயிருக்கு ஆபத்துள்ளது என பிரித்தானிய தீர்ப்பாயம் கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும் என அந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இலங்கை அகதிகள் வலிந்து மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் சித்திரவதை செய்யப்படும் அபாயம் காணப்படுகிறது. நம்பகத்தன்மை இல்லாத அறிக்கைகளின் அடிப்படையில் ஏராளமான இலங்கை அகதிகளின் நிலையை தீர்மானிக்க முடியாது, அப்படிச் செய்தால் சர்வதேச கடப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டுக்கு ஆளாகும்.
இவை உயிராபத்துடன் விளையாடும் பாரதூரமான விடயங்களாகும். என தேசிய நீதி செயல்திட்டத்தின் தலைமை சட்டத்தரணியும் பணிபாளருமான ஜோர்ஜ் நியூஹவுஸ் கூறியுள்ளார்.
குடியுரிமை மற்றும் அகதித் தஞ்சம் குறித்த கோரிக்கையைப் பரிசீலிக்கும் உள்துறை அமைச்சு, குடியுரிமை மதிப்பீட்டு அதிகார சபை மற்றும் மேல் நிர்வாக மேல்முறையீட்டு ஆணைக்குழு ஆகியவை அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சின் அறிக்கை மற்றும் அதிலுள்ள அம்சங்களை பரிசீலித்து கவனத்தில் எடுக்கும்.
அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சின் 2019ஆம் ஆண்டுக்கான இலங்கை குறித்த அறிக்கை மிகவும் பிழையானது மற்றும் அடிப்படை தராதரங்களற்றது என குறித்த இரு அமைப்புகளும் கூறியுள்ளன. நம்பகத்தன்மையற்ற அந்த அறிக்கை புறந்தள்ளப்பட வேண்டுமென இந்த இரு அமைப்புகளுடன் இணைந்து பல அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன.
அந்த அறிக்கை மற்றும் பிரித்தானிய உள்துறை அமைச்சின் அறிக்கை ஆகிய இரண்டின் அடிப்படையில் குடிவரவு முடிவுகள் எடுக்கப்படுவது இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோருகின்றன. ஆவணங்களிலுள்ள தவறுகள் திருத்தப்படும் வரை அந்த அறிக்கையைச் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படக் கூடாது என்று அந்த அமைப்புகள் கேட்டுள்ளன.
அதுமட்டுமின்றி அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் வழக்குகள் அனைத்தும் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் தஞ்சக் கோரிக்கைகள் தொடர்பில் இனியும் அவுஸ்திரேலிய அமைச்சின் அந்த அறிக்கையை அதிகாரிகள் சார்ந்திருக்கக் கூடாது என்பதற்கு பிரித்தானிய உயர்நிலை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டு என்கிறார் சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய மையத்தின் அதிகாரி ரவான் ஆரப். இலங்கையில் அரச ஆதரவில் சித்திரவதைகள் நடைபெறுவதில்லை என உள்விவகார அமைச்சு கூறுவது அதிர்ச்சியளிக்கிறது.
சுயாதீனமாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் ஆதாரங்கள் அவை தொடருவதாகக் கூறும் போது அரசு அதை அடக்கி வாசிப்பது மிகவும் கவலையாக உள்ளது.” என அந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
இலங்கையில் பாதுகாப்பு படையினரால் மக்கள் கைது செய்யப்பட்டு சட்ட விரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவது பரந்துபட்ட அளவில் நடைபெறுவதற்கான ஆதாரங்கள் பெருமளவில் காணப்படுகின்றன.
இதனிடையே ஜேர்மனியிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான பத்து பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் சுமார் 30 பேர் வலிந்து ஜேர்மனியிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவுஸ்திரேலிய அரசு புலம்பெயர்வு சட்டத்தில் ஏற்படுத்தியுள்ள புதிய திருத்தம், அகதிகளை வாழ் நாள் முழுவதும் கூட காலவரையின்றி சிறைவைக்கும் ஆபத்து காணப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இந்த சட்டத்திருத்தம், அவுஸ்திரேலிய அரசு அகதிகளின் விசாக்களை இரத்து செய்யும் அதிகாரத்தை வழங்குகின்றது. அதேவேளை, சொந்த நாட்டில் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள அகதிகளை நாடு கடத்தும் அனுமதியை வழங்க மறுப்பதால், விசா இரத்து செய்யப்பட்ட அகதிகள் காலவரையின்றி சிறையில் அடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இப்புதிய திருத்தத்தின் மூலம் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த ஒரு நபரின் அகதி
அந்தஸ்தை இரத்து செய்து வந்த நாட்டிற்கே திரும்பிச் செல்ல அறிவுறுத்தும்
அதிகாரத்தை சம்பந்தப்பட்ட துறை அமைச்சிற்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.